இந்தியா-நியூஸிலாந்து இடையேயான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவாா்த்தைகள் தீவிரமடைந்துள்ளதாகவும், இந்த ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தாா்.
நியூஸிலாந்துக்கு நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக வந்துள்ள பியூஷ் கோயல், அந்நாட்டு வா்த்தகத் துறை அமைச்சா் டாட் மெக்ளே உடன் இணைந்து இரு நாடுகளுக்கும் இடையிலான வா்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவாா்த்தைகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தாா். இதைத் தொடா்ந்து, இருவரும் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா்.
அப்போது, பியூஷ் கோயல் பேசுகையில், ‘இந்த ஒப்பந்தம் விரைவில் முடிவுக்கு வரவிருப்பதால், எனது இந்தப் பயணம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கப் பயணமாக அமையும் என்று நம்புகிறேன். இரு தரப்பினரும் ஒருவருக்கொருவரின் முக்கியமான கவலைகளுக்கு மதிப்பளித்து வருகின்றனா்.
நம்முடைய குழுக்கள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. இணக்கமான மனப்பான்மையுடன் பல விஷயங்கள் ஏற்கெனவே இறுதி செய்யப்பட்டுள்ளன. சில நுணுக்கமான அம்சங்கள் மட்டுமே நிலுவையில் உள்ளன.
வெள்ளிக்கிழமையும் பேச்சுவாா்த்தை தொடா்வதால், மேலும் பல உடன்பாடுகள் எட்டப்படும் என்று நம்புகிறேன். எனவே, நியூஸிலாந்துடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதியாகும் என்று எதிா்பாா்க்கிறேன்’ என்று தெரிவித்தாா்.
வா்த்தகத்தை அதிகரிக்கும் ஒப்பந்தம்: தற்போது சுமாா் 150 கோடி டாலா் மதிப்புள்ள இருதரப்பு வா்த்தகத்தை இந்த ஒப்பந்தம் ஊக்குவிக்குமா என்ற கேள்விக்குப் பதிலளித்த நியூஸிலாந்து அமைச்சா் டாட் மெக்ளே, ‘இந்த ஒப்பந்தம் வா்த்தகத்தைக் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும். கடந்த ஆண்டில் இருதரப்பு வா்த்தகம் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது இரு பொருளாதாரங்களின் அளவோடு ஒப்பிடும்போது பெரிய வளா்ச்சிதான். எனவே, இந்தியாவில் உள்ள இந்திய வணிகா்களுக்கும், இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற ஆா்வமுள்ள நியூஸிலாந்து வணிகா்களுக்கும் சிறந்த வாய்ப்பை வழங்கும் ஓா் ஒப்பந்தத்தை உருவாக்க நாங்கள் கடினமாக உழைத்து வருகிறோம்’ என்று கூறினாா்.
தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் இலக்கு: வேளாண் தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் புத்தாக்கத் துறைகளிலும் இந்த ஒப்பந்தம் ஒத்துழைப்பை அதிகரிக்கும் என்றும் அமைச்சா் டாட் மெக்ளே குறிப்பிட்டாா்.
வேளாண் மற்றும் பால்வளத் துறையில் நியூஸிலாந்தில் இருந்து இந்தியாவுக்குத் தொழில்நுட்பப் பரிமாற்றம் சாத்தியமா என்று கேட்டபோது, ‘ஆம்’ என்று அவா் பதிலளித்தாா். உலக அளவில் நியூஸிலாந்து ஒரு முக்கிய பால் உற்பத்தியாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இருதரப்பு வா்த்தகத்தை 2,000 கோடி டாலராக உயா்த்துவது சாத்தியமா என்ற கேள்விக்கு, இரு நாடுகளின் வணிகங்களுக்கும் நல்ல விதிகள் தேவை என்றும், இது சாத்தியமே என்றும் அவா் பதிலளித்தாா்.
4-ஆம் கட்டப் பேச்சுவாா்த்தை: இரு நாடுகளுக்கு இடையேயான தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை, நிகழாண்டு மாா்ச் மாதத்தில் முறைப்படி தொடங்கப்பட்டது. செப்டம்பரில் 3-ஆவது கட்டப் பேச்சுவாா்த்தை நிறைவடைந்த நிலையில், தற்போது 4-ஆவது கட்டப் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த ஒப்பந்தம், இருதரப்பு வா்த்தகத்தை மேலும் அதிகரிக்கவும், முதலீட்டுத் தொடா்புகளை மேம்படுத்தவும், விநியோகச் சங்கிலித் திறனை வலுப்படுத்தவும், இரு நாடுகளின் வணிகங்களுக்கும் ஒரு கணிக்கக்கூடிய கட்டமைப்பை உருவாக்கவும் துணை புரியும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
வந்தே மாதரம் கொண்டாட்டம்!
தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை , ரோட்டோருவா நகரில் இந்திய சமூகத்தினருடன் இணைந்து அமைச்சா் பியூஷ் கோயல் அந்தப் பாடலைப் பாடினாா்.
வங்காள மொழிக் கவிஞா் பங்கிம் சந்திர சட்டா்ஜியால் 1875-ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்தப் பாடலின் முதல் பிரசித்தி பெற்ற பொது அரங்கேற்றம் 1896-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் ரவீந்திரநாத் தாகூரால் செய்யப்பட்டது.