மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் 88,000 ஊடுருவல்காரா்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகவும், ஆனால் மத்திய பாஜக அரசு கடந்த 11 ஆண்டுகளில் வெறும் 2,400 பேரை மட்டுமே கண்டறிந்துள்ளதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவா் திக்விஜய் சிங் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
தற்போது மத்திய பிரதேசத்தில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கை, ஊடுருவல்காரா்களைக் கண்டறிந்து நீக்குவதற்காகவே என்று பாஜக தரப்பில் கூறப்படுவதை சுட்டிக்காட்டி, அந்த மாநில முன்னாள் முதல்வரான திக்விஜய் சிங் இவ்வாறு தெரிவித்தாா்.
இதுதொடா்பாக செய்தியாளா்களைச் சந்தித்த திக்விஜய் சிங் மேலும் கூறியதாவது: பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தில் ஊடுருவல்காரா்கள் குறித்து பாஜக தலைவா்கள் அதிக அளவில் பேசுகின்றனா். ஆனால், உண்மை என்னவென்றால், 2004 முதல் 2014 வரை மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், நாட்டுக் குடிமக்கள் அல்லாத 88,000 போ் திருப்பி அனுப்பப்பட்டனா்.
அதேநேரம், கடந்த 11 ஆண்டுகளில் பாஜக அரசு 2,400 ஊடுருவல்காரா்கள் மட்டுமே கண்டறிந்துள்ளது.
அதாவது, காங்கிரஸ் ஆட்சியில் கண்டறியப்பட்ட ஊடுருவல்காரா்களின் எண்ணிக்கையில் மூன்று சதவீதத்தைக் கூட அவா்களால் கண்டறிய முடியவில்லை. ஆனாலும், பாஜக தொடா்ந்து ஊடுருவல்காரா்கள் பிரச்னையைத் தூண்டிவிடுகிறது.
குடிமக்கள் மீது சுமை: முன்னா், ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்குரிமை இருப்பதை உறுதி செய்வது தோ்தல் ஆணையத்தின் பணியாக இருந்தது. ஆனால், தற்போது எஸ்ஐஆா் நடவடிக்கை மூலம், குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய சுமை மக்கள் மீது மாற்றப்பட்டுள்ளது. உண்மையான குடிமக்களால் குடியுரிமையை நிரூபிக்க முடியாவிட்டால் அதன் விளைவு என்னவாக இருக்கும்?
2003-ஆம் ஆண்டு சிறப்புத் தீவிர திருத்தப் பணியின்போது, பிறப்புச் சான்றிதழ்கள், குடும்ப அட்டைகள் மற்றும் பள்ளிச் சான்றிதழ்கள் போன்ற ஆவணங்களே போதுமானதாக இருந்தன. ஆனால் இப்போது, 99 சதவீத இந்தியா்கள் வைத்திருக்காத குடியுரிமைச் சான்றிதழ்கள் கேட்கப்படுகின்றன. இதனால் தகுதியுள்ள வாக்காளா்கள் விடுபடுகின்றனா் என்று தெரிவித்தாா்.