முகப்பு
இந்தியா

தில்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு: 13 பேர் பலி - விபத்தா? சதிச்செயலா?

தில்லி செங்கோட்டை அருகேவுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் முன்பு கார் வெடித்துச் சிதறியது.

Updated On : 10 நவம்பர், 2025 at 7:26 PM
தில்லி கார் வெடிப்பு - ENS
பகிர்:
Updated On : 10 நவம்பர், 2025 at 7:24 PM

தில்லி செங்கோட்டை அருகேவுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் முதலாம் வாயிலில் கார் இன்று (நவ. 10) மாலை திடீரென வெடித்துச் சிதறியது. இதில் 13 பேர் உயிரிழந்ததாகவும், 24 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கோட்டை அருகே இச்சம்பவம் நடந்துள்ளதால், இதில் பயங்கரவாத சதித்திட்டம் ஏதேனும் உள்ளதா? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

Updated On : 10 நவம்பர், 2025 at 7:24 PM
விபத்து நடந்த இடத்தில்... - பிடிஐ

தில்லி செங்கோட்டை அருகேவுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் முதலாம் வாயில் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் இன்று (நவ. 10) மாலை 6.52 மணியளவில் தீப்பிடித்து எரிந்தது. தீப்பிடித்து எரிந்த சிறிது நேரத்தில் கார் வெடித்துச் சிதறியதாகக் கூறப்படுகிறது.

Advertisement

எனினும், மெட்ரோ ரயில் நிலையம் அருகே இருந்த மக்கள், முதலில் கார் வெடித்ததாகவும் பின்னர், தீப்பிடித்து எரிந்ததாகவும் கூறுகின்றனர்.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இச்சம்பவம் நடந்ததால், உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளில் வீரர்கள் ஈடுபட்டனர். வெடித்துச் சிதறிய கார் அருகே இருந்த மற்ற வாகனங்களும் தீப்பிடித்து எரிந்ததாக தீயணைப்பு வீரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார் யாருக்குச் சொந்தமானது? காரை யார் அங்கு நிறுத்தியது என்பதை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.

Updated On : 10 நவம்பர், 2025 at 7:24 PM
வெடித்துச் சிதறி விபத்துக்குள்ளான கார் எரியும் காட்சி - பிடிஐ

ஜம்மு - காஷ்மீர், ஹரியாணா மாநிலங்களில் காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையில் 2900 கிலோ வெடிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், செங்கோட்டை அருகே கார் வெடித்து விபத்து நேர்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ராணுவ முகாம்கள் உள்ள நிலையில், கார் வெடித்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.

இதனால், கார் வெடித்த பகுதியில் உள்ள மக்களிடம் காவல் துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது. மேலும் செங்கோட்டையை சுற்றியுள்ள பழைய தில்லி உள்ளிட்டப் பகுதிகளிலும் காவல் துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

- PTI

13 பேர் பலி 24 பேர் படுகாயம்

தில்லி மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் வெடித்துச் சிதறிய விபத்தில் இதுவரை 13 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 24 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள எல்.என்.ஜே.பி. மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். கார் வெடித்துச் சிதறிய இடத்தின் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோ, கார்கள் உள்ளிட்ட பிற வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன.

தீயணைப்புப் பணிகள்... - பிடிஐ

பயங்கரவாதத் தாக்குதலா?

இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்களின் உடலில் பெல்லட் என்ற சிறிய குண்டுகள் அல்லது சக்திவாய்ந்த குண்டு வெடிப்புக்கான பாதிப்புகள் இல்லாததாலும், சம்பவ இடத்தில் குண்டு வெடிப்புக்கான வயர்கள் தற்போது வரை கிடைக்காததாலும், இது குண்டு வெடிப்பு சம்பவமாக உடனடியாக உறுதிசெய்யப்படவில்லை என்று தில்லி காவல்துறை மூத்த அதிகாரி தெரிவித்தார்.

மேலும், இந்தச் சம்பவத்துக்கு எந்தவித பயங்கரவாத அமைப்பும் இதுவரையில் பொறுப்பேற்கவில்லை. எனினும், அனைத்து கோணங்களிலும் மத்திய புலனாய்வு அதிகாரிகள் தொடர்விசாரணை நடத்தி வருகின்றனர்.

- PTI

அமித் ஷாவுடன் பிரதமர் ஆலோசனை

கார் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

இதில், மக்கள் அதிகம் இருந்த இடத்தில் நடந்த கார் விபத்தையடுத்து அங்கு நிலவும் சூழல் குறித்து பிரதமர் கேட்டறிந்தார். மேலும், காவல் துறையுடன் தொடர்பில் இருக்குமாறு அமித் ஷாவை வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

அமித் ஷா பேட்டி

தில்லி செங்கோட்டை அருகேவுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் கார் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

கார் வெடிவிபத்து தொடர்பாக காவல் ஆணையருடன் தொடர்பில் இருந்து தகவல்களை கேட்டறிந்த பிறகு செய்தியாளர்களுடன் அமித் ஷா பேசியதாவது,

''தில்லி செங்கோட்டை அருகே கார் வெடித்த விபத்து குறித்து அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும். கார் வெடித்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கார் வெடிப்பு சம்பவம் நடந்த இடத்துக்கும், படுகாயம் அடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கும் செல்லவுள்ளேன். அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கவுள்ளேன். கார் வெடி விபத்துக்கு பின்புலத்தில் செயல்பட்டவர்கள் யார் என்பதை விசாரணை நடத்தி முழு உண்மையை மக்கள் முன்பு வைப்போம்'' எனக் குறிப்பிட்டார்.

சம்பவ இடத்தில் அமித் ஷா ஆய்வு - AP

பாதுகாப்பு அதிகரிப்பு

தில்லி கார் வெடித்துச் சிதறி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, மும்பை, உத்தரப் பிரதேசம், கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தில்லி நகரின் முக்கிய இடங்களில் காவல் துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வழக்கமான ரோந்துப் பணிகள் மட்டுமின்றி தீவிர கண்காணிப்பில் ஈடுபட காவல் துறையினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தலைவர்கள் இரங்கல்

தில்லி கார் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவத்துக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி உள்ளிட்டத் தலைவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் பலத்த பாதுகாப்பு - AP
Updated On : 11 நவம்பர், 2025 at 4:42 AM

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், ``பல அப்பாவி உயிர்களைப் பறித்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். சம்பவத்தின் காட்சிகள் இதயத்தை நொறுக்குகிறது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்; காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டும்’’ என்று பதிவிட்டுள்ளார்.

ஹரியாணா வெடிபொருள்

தில்லிக்கு 50 கி.மீ. தொலைவில் உள்ள ஹரியாணாவில் இருந்து சுமார் 3,000 கிலோ வெடிபொருள்கள் இன்று பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தில்லி சம்பவத்தில் வெடித்த காரின் எண்ணும் ஹரியாணா எண்ணைக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

காரின் உரிமையாளர் கைது

சல்மான் என்பவரின் பெயரில் கார் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க | ஜம்மு - காஷ்மீரில் 2,900 கிலோ வெடிப்பொருள் பறிமுதல்: தாக்குதல் திட்டம் முறியடிப்பு

summary

Explosion in a car near Gate No. 1 of the Red Fort Metro Station

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.