தில்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இக்கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மேலும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மூத்த உளவுத் துறை அதிகாரிகளும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
தில்லி செங்கோட்டை அர்க்கே உள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையத்தின் முதல் வாயில் அருகே நவ. 10ஆம் தேதி கார் ஒன்று மெதுவாகச் சென்றுகொண்டிருக்கும்போது திடீரென வெடித்துச் சிதறியது. அருகிலிருந்த மற்ற வாகனங்களும் தீப்பிடித்து எரிந்ததால், இச்சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 24 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) 10 பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
இதனிடையே பூடான் பயணத்தை முடித்துக்கொண்டு தில்லி திரும்பிய பிரதமர் மோடி, கார் விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவோரை நேரில் சென்று சந்தித்தார்.
இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சரவை பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி உயர்நிலை ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனையில் விசாரணையின் நிலை மற்றும் குற்றப்பின்னணி குறித்து ஆலோசைக்கப்படும் எனத் தெரிகிறது.
தில்லி முழுவதுமே பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க | தில்லி கார் வெடிப்பு! குற்றவாளியுடன் தொடர்புடைய சிவப்புக் காரை தேடும் தில்லி போலீஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.