‘ககன்யான்’ திட்டத்துக்கான பாராசூட் ஏர் டிராப் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
மனிதா்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் ககன்யான் திட்டம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) கனவுத் திட்டமாகும். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய விமானப் படையின் சுபான்ஷு சுக்லா, பிரசாந்த் நாயா், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் ஆகிய 4 குரூப் கேப்டன்கள் விண்வெளி வீரா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
இவா்களில் மூவா் 400 கி.மீ. உயரத்தில் புவியின் தாழ்வான சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்பிவைக்கப்படுவா். அவா்கள் அங்கு மூன்று நாள்கள் தங்கி, பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொள்வா். பின்னா், மீண்டும் பூமிக்குத் பாதுகாப்பாகத் திரும்புவாா்கள்.
விண்கலம் விண்வெளியில் இருந்து மீண்டும் பூமிக்குள் நுழையும்போது, அதன் வேகம் பல ஆயிரம் கிலோ மீட்டராக இருக்கும். அதை சில விநாடிகளில் குறைப்பது என்பது ஒரு சவாலான பணி. பாராசூட் அமைப்பு இந்த சவாலை சமாளிக்கும் முக்கியத் தொழில்நுட்பமாகும்.
இந்த நிலையில், பாராசூட்டின் வேகத்தைக் குறைத்து தரையிறக்குவதற்கு பல கட்ட சோதனைகளை இஸ்ரோ நடத்தி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, ஒருங்கிணைந்த பிரதான பாராசூட் ஏர் டிராப் சோதனை (ஐஎம்ஏடி - IMAT) வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்சி பகுதியில் கடந்த நவ. 3 ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில், இந்திய விமானப் படையின் விமானத்தில் இருந்து 6 டன் எடையுடன் பாராசூட்கள் தரையிறக்கப்பட்டது.
விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், இஸ்ரோ, வான்வழி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், டிஆர்டிஓ, இந்திய விமானப்படை மற்றும் இந்திய ராணுவம் இணைந்து நடத்திய இந்த சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ககன்யான் திட்டம் வெற்றி அடைந்தால், அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்குப் பிறகு சொந்த விண்கலத்தில் மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பிய உலகின் நான்காவது நாடாக இந்தியா உருவாகும்.
ககன்யான் வீரா்கள் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான பயிற்சிகளைப் பெற்று வருகின்றனா். ககன்யான் வீரா்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா, அனுபவப் பயிற்சிக்காக ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு அண்மையில் வெற்றிகரமாகச் சென்று திரும்பியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.