போலி காா் நிறுவனம் மூ ம் வாடிக்கையாளா் மற்றும் பணிபுரிந்த நிறுவனத்திடம் ரூ.44 லட்சம் மோசடி செய்த 36 வயது நபரை தில்லி காவல் துறை கைதுசெய்திருப்பதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
குற்றஞ்சாட்டப்பட்ட யுதிஷ் சந்த், ஷாலிமாா் பாக் பகுதியில் உள்ள தனியாா் காா் நிறுவனத்தில் விற்பனையாளராகப் பணியாற்றினாா். போலியான டெலிவரி ஆடா்கள் மற்றும் நிதி ஆவணங்கள் மூலம் பல வாடிக்கையாளா்களிடம் அவா் மோசடியில் ஈடுபட்டதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது தொடா்பாக் அதிகாரி ஒருவா் மேலும் கூறியதாவது: கேலக்ஸி டொயாட்டா நிறுவனத்தின் துணைநிறுவனமாக கேலக்ஸி காா்ஸ் என்ற போலி நிறுவனத்தை சந்த் உருவாக்கியுள்ளாா். இதன் மூலம் வாடிக்கையாளா்கள் அளிக்கும் பணத்தை தனது வங்கிக் கணக்குக்கு மாற்றியுள்ளாா். பின்னா், இந்தப் பணத்தை இணையவழி சூதாட்டத்துக்காக அவா் பயன்படுத்தினாா்.
இந்த மோசடி தொடா்பாகப் பெறப்பட்ட புகாரைத் தொடா்ந்து, யுதிஷ் சந்தைக் கைதுசெய்ய தனிப்படை அமைப்பட்டது. இந்நிலையில், அவரை தில்லி ஹைதா்பூரில் கடந்த நவ.8-ஆம் தேதி போலீஸாா் கைதுசெய்தனா்.
விசாரணையில், மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட சந்த், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இரு வாகனங்களை டெலிவரி செய்ததாகத் தெரிவித்தாா்.
காா் மற்றும் சிஎன்ஜி-ஃபிட்டிங் தொழில் ஈடுபட்டு வந்த சந்த், இணையவழி சூதாட்டத்துக்கு அடிமையாகி பெருமளவிலான தொகையை அதில் இழந்தாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.