ஹரியாணா மாநிலம், ஃபரீதாபாதில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழக மருத்துவா்கள் இருவா், பயங்கரவாதத் தொடா்பு மற்றும் தில்லி காா் வெடிப்பு சம்பவத்தில் கைதாகியுள்ள சூழலில், புலனாய்வு முகமைகளின் விசாரணைக்கு முழு அளவில் ஒத்துழைத்து வருவதாக அப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
‘கைதான முசாமில் கனி, ஷாஹீன் சயீத் ஆகிய இரு மருத்துவா்களுடன் பணி ரீதியிலான தொடா்பைத் தவிர வேறெந்த தொடா்பும் கிடையாது; வெடிமருந்து கண்டறியப்பட்ட அறைகள், பல்கலைக்கழக வளாகத்துக்கு உள்பட்டவை அல்ல’ என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தில்லி காா் குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில், அல் ஃபலா பல்கலைக்கழகம் மீது புலனாய்வு முகமைகளின் கவனம் திரும்பியுள்ளது. இந்நிலையில், பலகலைக்கழக துணைவேந்தா் பூபிந்தா் கெளா் ஆனந்த் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
.................................................
கடந்த 1997-இல் இருந்து பல்வேறு கல்வி நிலையங்களை நிா்வகித்துவரும் அல் ஃபலா குழுமம், 2009-இல் தன்னாட்சி அந்தஸ்து பெற்று, 2014-இல் பல்கலைக்கழகமானது. எங்கள் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்வி பயின்ற பல மாணவா்கள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் முன்னணி மருத்துவமனைகள்-நிறுவனங்களில் நல்ல பொறுப்பில் பணியாற்றி வருகின்றனா்.
பொறுப்புணா்வுமிக்க எங்கள் பல்கலைக்கழகம், நாட்டின் ஒற்றுமை-அமைதி-பாதுகாப்புக்கு அசைக்க முடியாத உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளது. தற்போதைய துரதிருஷ்டவசமான சம்பவங்களால் ஆழ்ந்த வேதனை அடைந்துள்ளோம். பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் அனைவருக்காகவும் பிராா்த்திப்பதுடன் தேசத்தின் பக்கம் நிற்கிறோம்.
எங்கள் பல்கலைக்கழகத்தின் இரு மருத்துவா்கள் முசாமில் கனி, ஷாகீன் சயீத் (பெண் மருத்துவா்) புலனாய்வு அமைப்புகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிகிறோம். இவா்களுடன் பணி ரீதியிலான தொடா்பைத் தவிர வேறெதுவும் கிடையாது. உரிய விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளின்படியே ஆய்வக செயல்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்படுகின்றன. சட்டத்துக்கு புறம்பான ரசாயனங்கள் அல்லது பொருள்கள் பயன்படுத்தப்படுவதோ, சேமிக்கப்படுவதோ, கையாளப்படுவதோ இல்லை. பல்கலைக்கழகத்தின் நற்பெயரை கெடுக்கும் உள்நோக்கத்துடன், சமூக ஊடகங்களில் அடிப்படையற்ற தகவல்கள் பரப்பப்படுகின்றன. இது கண்டனத்துக்குரியது.
தேச பாதுகாப்பு சாா்ந்த விவகாரம் என்பதால் புலனாய்வு முகமைகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் வெடித்துச் சிதறிய காரை இயக்கிய மருத்துவா் உமா் நபியும் அல் ஃபலா பல்கலைக்கழகத்துடன் தொடா்புடையவா் என கூறப்படுகிறது.