தில்லி கார் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது உமர் என்பது டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
அவரது தாயாரின் மாதிரியுடன் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டதில் 100 சதவீதம் ஒத்துப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலை கார் வெடித்துச் சிதறியதில் 12 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த கார் வெடிப்பு தொடர்பாக தில்லி காவல்துறை, தேசிய புலனாய்வு முகமை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் தீவிர விசாரணை மேற்கொண்டதில், இது பயங்கரவாதச் செயல் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை மத்திய அமைச்சரவை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதனிடையே, செங்கோட்டை அருகே சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த விசாரணை அமைப்புகள், வெடித்த ’ஹூண்டாய் ஐ20’ காரை ஓட்டியவர் ஃபரிதாபாத்தில் மருத்துவராகப் பணிபுரியும் உமர் என்பதை கண்டுபிடித்தனர்.
அவர், ’ஹூண்டாய் ஐ20’ காரில் வெடிகுண்டை பொருத்தி தற்கொலைத் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்பட்டது. தொடர்ந்து, வெடித்த காரில் இருந்த உடல் பகுதிகளைக் கைப்பற்றி, உமரின் தயாரின் மாதிரியுடன் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், குண்டுவெடிப்பின் போது காரின் ஸ்டீயரிங் வீல் மற்றும் ஆக்ஸிலரேட்டருக்கும் இடையில் சிக்கிய உமரின் கால் பகுதி மீட்கப்பட்டது. அது அவரது தாயாரின் டிஎன்ஏ பரிசோதனையுடன் ஒத்துப் போயுள்ளது என்று தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வழக்கில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய பல மருத்துவர்கள் ஃபரிதாபாத் மற்றும் ஜம்மு - காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.