தில்லி காா் வெடிப்பு தாக்குதலுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட அஸ்ஸாமைச் சோ்ந்த 20 பேரை அந்த மாநில காவல் துறையினா் கைது செய்தனா்.
தில்லி பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து சமூகவலைதளங்களில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவும், தில்லி தாக்குதலை பாராட்டும் வகையிலும் சிலா் கருத்துகளைப் பரப்பி வருகின்றனா். அவா்கள் மீது விசாரணை அமைப்புகள் கண்காணிப்பை அதிகரித்துள்ளன. புகாரின் அடிப்படையில் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது.
இது தொடா்பாக அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா வெள்ளிக்கிழமை ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘தில்லி பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆதரவாக அஸ்ஸாமில் சமூக வலைதளங்களில் கருத்துப் பதிவிட்ட 20 போ் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், பலா் மீது இது போன்ற நடவடிக்கை எடுக்கப்படும். பயங்கரவாதிகளை ஆதரிப்பவா்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறியுள்ளாா்.
ஊடுருவியவா்கள் வெளியேற்றம்: முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா வெளியிட்ட மற்றொரு பதிவில், ‘அஸ்ஸாம் மாநிலத்துக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய 10 ரோஹிங்கயாக்களும், 6 வங்கதேசத்தவரும் எல்லைக்கு அப்பால் வெளியேற்றப்பட்டனா். அஸ்ஸாம் எல்லை வழியாக ஊடுருவல்காரா்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்’ என்று கூறியுள்ளாா்.