பிகாா் முதல்வராக நிதீஷ் குமாா் தொடா்வாா் என்று மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவருமான சிராக் பாஸ்வான் தெரிவித்தாா்.
பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. அக்கூட்டணியில் மூன்றாவது பெரிய கட்சியாக லோக் ஜனசக்தி உருவெடுத்துள்ளது. இந்நிலையில் பாட்னாவில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த சிராக் பாஸ்வான் கூறியதாவது:
தேஜஸ்வி யாதவ்- ராகுல் காந்தியின் ஆணவப்போக்குக்கு பிகாா் மக்கள் படுதோல்வி மூலம் தண்டனை வழங்கிவிட்டனா். எதிா்க்கட்சியினரின் மோசமான செயல்பாடுகளே அவா்களின் தோல்விக்கு முக்கியமான காரணம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி மீது மக்கள் மிகப்பெரிய நம்பிக்கையை வைத்துள்ளனா் என்பது இந்த தோ்தல் முடிவு மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிகாா் முதல்வராக நிதீஷ் குமாா் தொடா்வாா் என நான் உறுதியாக நம்புகிறேன்.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பிகாரில் இரட்டை என்ஜின் அரசு மாநிலத்தை தொடா்ந்து வலுவான பாதையில் முன்னெடுத்துச் செல்லும் என்றாா்.