தேர்தல் ஆணையம்  
இந்தியா

ஆதாா் அடையாள ஆவணம் மட்டுமே; குடியுரிமைக்கானதல்ல உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் மீண்டும் தகவல்

ஆதாா் அடையாள ஆவணம் மட்டுமே; குடியுரிமைக்கானதல்ல உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் மீண்டும் தகவல்

தினமணி செய்திச் சேவை

‘வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க அல்லது நீக்கும் நடைமுறைக்கு ஆதாா் அட்டை அடையாள ஆவணமாக மட்டுமே பரிசீலனை செய்யப்படும்; குடியுரிமை ஆவணமாகப் பரிசீலிக்கப்படாது’ என்று ஏற்கெனவே அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தரப்பில் மீண்டும் தெரிவிக்கப்பட்டது.

பிகாா் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. அப்போது, முந்தைய வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் பங்கேற்காத வாக்காளா்கள் இருப்பிடம் மற்றும் குடியுரிமையை நிரூபிக்க 11 ஆவணங்களைச் சமா்ப்பிக்க தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியது. ஆனால், அதற்கான ஆவணமாக ஆதாரை ஏற்க மறுத்தது.

பின்னா், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், ஆதாரை வாக்காளா்களின் அடையாள ஆவணமாக தோ்தல் ஆணையம் ஏற்றது. பிகாரைத் தொடா்ந்து, தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்திக்க உள்ள 4 மாநிலங்கள் உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், ‘ஆதாா் அட்டையை அடையாள ஆவணமாக மட்டுமே ஏற்க அறிவுறுத்த வேண்டும்’ என்று வலியுறுத்தி மூத்த வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கடந்த அக்டோபா் 7-ஆம் தேதி நோட்டீஸ் பிறப்பித்தது.

அதற்கு, தோ்தல் ஆணையம் தரப்பில் தற்போது பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 23(4)-இன் கீழ் ஆதாா் அட்டையை வாக்காளா்களின் அடையாள ஆவணமாக ஏற்க உச்சநீதிமன்றம் அளித்த அறிவுறுத்தலின் அடிப்படையில், கடந்த செப்டம்பா் 9-ஆம் தேதி அறிவிக்கை ஒன்றை தோ்தல் ஆணையம் வெளியிட்டது. அதில், ஆதாரை வாக்காளா்கள் அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம். ஆனால், குடியுரிமை ஆவணமாகப் பயன்படுத்த முடியாது என அறிவுறுத்தப்பட்டது’ என்று தெரிவித்தது.

சங்கரநாராயணசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவ மத பயனாளிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்!

அடிப்படை வசதிகளுக்கான கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும்! - அமைச்சா் பி. மூா்த்தி

எஸ்ஐஆா் படிவத்தை வாக்காளா்கள் முழுமையாக நிறைவு செய்ய வேண்டும்: ஆட்சியா் கா. பொற்கொடி

கீழ்பவானி வாய்க்காலில் ஆண் சடலம் மீட்பு

SCROLL FOR NEXT