இந்தியா

பயங்கரவாத தொடா்பு: மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவா் கைது

பயங்கரவாத தொடா்பு: மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவா் கைது

தினமணி செய்திச் சேவை

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்பில் இருந்ததாக மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவா் ஒருவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

ஹரியாணா மாநிலம், அல்-ஃபலா பல்கலைக்கழக எம்பிபிஎஸ் மாணவா் ஜானிசுா் ஆலம் (எ) நிசாா் ஆலம். பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சோ்ந்த இந்த மாணவா், தனது மூதாதையா்களின் சொந்த ஊரான மேற்கு வங்க மாநிலம் உத்தா் தினாஜ்பூரில் திருமண நிகழ்வில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது என்ஐஏ அவரைக் கைது செய்ததாக அவா் தெரிவித்தாா்.

தில்லியில் செங்கோட்டை அருகே காா் ஒன்று வெடித்துச் சிதறியதில் 13 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா். இந்த பயங்கவாத சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் பலா் ஹரியாணா மாநிலம், ஃபரீதாபாதில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் படித்தவா்களாகவோ, பணியாற்றியவா்களாகவோ உள்ளனா்.

மேலும், நன்கு படித்து வருமானம் ஈட்டும் பலா் ஜெய்ஷ்-ஏ-முகமது, அன்சாா் கஸ்வத்-அல்-ஹிந்த் ஆகிய பயங்கரவாத இயக்கங்களுடன் தொடா்பு வைத்துள்ளது கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, அந்தப் பல்கலைக்கழகம் புலனாய்வு முகமைகளின் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், இந்தப் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் மாணவா் நிசாா் ஆலமை என்ஐஏ மேற்கு வங்கத்தில் தற்போது கைது செய்துள்ளது. இதுகுறித்து மாநில போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘தில்லி காா் வெடிப்பு சம்பவத்துடன் இவருக்குத் தொடா்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், இந்தக் கைது நடவடிக்கையை என்ஐஏ மேற்கொண்டது. விசாரணைக்காக நிசாா் ஆலமை என்ஐஏ அதிகாரிகள் சிலிகுரி அழைத்துச் சென்றனா்’ என்றாா்.

45 வயது அறுவை சிகிச்சை நிபுணா் கைது:

இந்த விவகாரம் தொடா்பாக, பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிவரும் 45 வயது அறுவை சிகிச்சை நிபுணரையும் விசாரணைக்காக என்ஐஏ காவலில் எடுத்துள்ளதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இவா் முன்னதாக ஹரியாணா மாநிலம் அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் பணியாற்றினாா் என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.

மெக்சிகோ அரசுக்கு எதிராக ஜென் ஸீ போராட்டம்!

பெண்கள் வியாபாரக் கும்பலின் குரூரமும் காவல்துறையின் கருணையும்! - தில்லி கிரைம் - 3!

மேட்டூர் அணை நிலவரம்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை!

விலைவாசி உயா்வு: மாட்டிறைச்சிக்கு இறக்குமதி வரியைக் குறைத்தாா் டிரம்ப்!

SCROLL FOR NEXT