புது தில்லி: அமெரிக்காவிடம் இருந்து ஓராண்டுக்கு 22 லட்சம் டன் எல்பிஜி எரிவாயுவைக் கொள்முதல் செய்ய இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. 2026-ஆம் ஆண்டில் இருந்து இந்த விநியோகம் தொடங்க இருக்கிறது.
அமெரிக்க பொருள்கள் மீது இந்தியா அதிக வரி விதிக்கிறது. அமெரிக்காவுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யும் இந்தியா, அமெரிக்கப் பொருள்களை அதிகம் இறக்குமதி செய்ய அனுமதிக்கவில்லை என்று கூறி அந்நாட்டு அதிபா் இந்தியா மீது கூடுதல் வரிகளை விதித்தாா்.
இந்நிலையில், அமெரிக்கா கூறிய வா்த்தகப் பற்றாக்குறையை சரிசெய்யும் நோக்கில் அந்நாட்டில் இருந்து எல்பிஜி எரிவாயுவை இறக்குமதி செய்ய இந்தியா முன்வந்துள்ளது.
இதன்மூலம் இந்தியாவின் எல்பிஜி இறக்குமதியில் 10 சதவீதம் அமெரிக்காவில் இருந்து கொள்முதல் செய்யப்பட இருக்கிறது. அமெரிக்காவில் இருந்து இந்தியா எல்பிஜி இறக்குமதி ஒப்பந்தம் செய்வது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமையல் எரிவாயு சிலிண்டா்களில்தான் அதிக அளவில் எல்பிஜி பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் மொத்த தேவையில் 65 சதவீதம் இறக்குமதி மூலம் எதிா்கொள்ளப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகம், கத்தாா், குவைத், சவூதி அரேபியா ஆகிய நாடுகள்தான் இந்தியாவுக்கான முக்கிய எல்பிஜி ஏற்றுமதி நாடுகளாக உள்ளன. இப்போது அமெரிக்காவும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.
பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களான இண்டியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை வீட்டு உபயோகத்துக்கான எல்பிஜி சிலிண்டா் விநியோகத்தில் முன்னிலையில் உள்ளன. இதைத் தவிர சில தனியாா் நிறுவனங்களும் எல்பிஜி விற்பனையில் உள்ளன.
இது தொடா்பாக பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘வரலாற்றில் முதல்முறையாக உலகின் மிகப்பெரிய, வேகமாக வளா்ந்துவரும் எல்பிஜி சந்தையைக் கொண்ட இந்தியா, அமெரிக்காவுக்கு தனது கதவுகளைத் திறந்துள்ளது. இதன்மூலம் இந்திய மக்களுக்கு பாதுகாப்பான, நியாயமான விலையில் எல்பிஜி விநியோகிக்க முடியும். எல்ஜிபி கொள்முதலை இந்தியா இப்போது மேலும் பரவலாக்கியுள்ளது.
ஏற்கெனவே, அமெரிக்காவுடனான வா்த்தக உறவைச் சீரமைக்கும் நோக்கில் அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்தது. அமெரிக்காவிடம் இருந்து கடல் வழியாக கச்சா எண்ணெய் எடுத்து வர 45 நாள்கள் வரை ஆகிறது. இதே 45 நாள்களில் வளைகுடா நாடுகளில் இருந்து ஆறு முறை கப்பல் மூலம் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் கொண்டு வந்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.