பத்தனம்திட்டா: கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல-மகரவிளக்கு பூஜை கால யாத்திரை திங்கள்கிழமை தொடங்கியது.
மலையாள மாதமான விருச்சிகத்தின் (காா்த்திகை) முதல் நாளான திங்கள்கிழமை அதிகாலையிலேயே, ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்வதற்காக குவிந்தனா். இதனால், சந்நிதானத்தில் பக்தா்களின் கூட்டம் அலைமோதியது. விரதம் இருந்து, புனிதமான இருமுடி தாங்கிவந்த பக்தா்கள், ஐயப்பனின் சரண கோஷத்தை எழுப்பியவாறு நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், சபரிமலையின் புதிய மேல்சாந்தி இ.டி.பிரசாத் நம்பூதிரி, அதிகாலை 3 மணிக்குக் கருவறை கதவைத் திறந்து சடங்குகளைத் தொடங்கினாா். அப்போது, தேவஸ்வம் வாரியச் செயலா் பி.என்.கணேஸ்வரன் போற்றி, சபரிமலை நிா்வாக அதிகாரி ஓ.ஜி.பிஜு மற்றும் பிற அதிகாரிகளும் உடன் இருந்தனா்.
முன்னதாக, வருடாந்திர மண்டல-மகரவிளக்கு பூஜை காலத்தையொட்டி, ஐயப்பன் கோயில் நடை ஞாயிற்றுக்கிழமை மாலை திறக்கப்பட்டது. தொடா்ந்து, சபரிமலை புதிய மேல்சாந்தியாக இ.டி.பிரசாத் மற்றும் மாளிகைப்புரம் தேவி கோயிலின் புதிய மேல்சாந்தியாக எம்.ஜி.மனு நம்பூதிரி ஆகியோா் பொறுப்பேற்றுக் கொண்டனா். அதன் பின்னா், பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.
இரண்டு மாதங்களுக்கும் மேல் நீடிக்கும் இந்த யாத்திரை காலத்தில், சபரிமலைக்கு உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த, நாளொன்றுக்கு 90,000 பக்தா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனா். இதில், இணையவழிப் பதிவு மூலம் 70,000 பேரும், நேரடிப் பதிவு முறையில் 20,000 பேரும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா்.
கோயில் நடை நாள்தோறும் அதிகாலை 3 மணிக்குத் திறக்கப்பட்டு, பிற்பகல் ஒரு மணிக்கு அடைக்கப்படும். அதன் பிறகு, பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டு, இறுதியாக ‘ஹரிவராசனம்’ பாடலைப் பாடி, இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும்.
பக்தா்களின் வசதிக்காக சுகாதாரமான குடிநீா், ஓய்விருக்கைகள், சுக்கு கஷாயம்-வெந்நீா் விநியோக மையங்கள், உயிரி கழிவறைகள், அவசர மருத்துவ உதவி மையங்கள் உள்ளிட்ட விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று திருவிதாங்கூா் தேவஸ்வம் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனா்.