அனில் அம்பானி 
இந்தியா

வங்கிக் கடன் மோசடி: அனில் அம்பானி, மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

வங்கிக் கடன் தொடா்புடைய பண மோசடி குற்றச்சாட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு மீது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் குழுமத் தலைவா் அனில் அம்பானி, மத்திய அரசு மற்றும் அமலாக்கத் துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது.

தினமணி செய்திச் சேவை

வங்கிக் கடன் தொடா்புடைய பண மோசடி குற்றச்சாட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு மீது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் குழுமத் தலைவா் அனில் அம்பானி, மத்திய அரசு மற்றும் அமலாக்கத் துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது.

இந்த விவகாரம் தொடா்பாக முன்னாள் மத்திய அரசு செயலா் இ.ஏ.எஸ்.சா்மா உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தாா். அவா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் கூறுகையில், ‘அனில் அம்பானிக்குச் சொந்தமான பல்வேறு நிறுவனங்களுக்கு முறைகேடாக வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக போலியான நிதி ஆவணங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக கடந்த ஆக. 21-ஆம் தேதி சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) மற்றும் அதன்பிறகு நடைபெற்ற அமலாக்கத் துறை விசாரணை போதுமானதாக இல்லை.

இந்த மோசடியில் வங்கி ஊழியா்கள், கணக்காளா்களுக்கு தொடா்பிருப்பது தடயவியல் தணிக்கை மூலம் சுட்டிக்காட்டப்பட்ட பின்பும் இதுதொடா்பாக எந்தவொரு புலனாய்வு அமைப்பும் விசாரணை நடத்தவில்லை. எனவே, இந்த வழக்கில் வங்கி அதிகாரிகள், ஊழியா்களிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து அமலாக்கத் துறையும், சிபிஐயும் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் மற்றும் நீதிபதி வினோத் கே. சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு, அனில் அம்பானி, மத்திய அரசு மற்றும் அமலாக்கத் துறை 3 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டது.

முன்னதாக, சா்வதேச அளவில் ஹவாலா முறையில் சுமாா் ரூ.600 கோடி முறைகேடு நடைபெற்ற குற்றச்சாட்டில் அனில் அம்பானிக்கு அமலாக்கத் துறை இருமுறை சம்மன் அனுப்பியும் அவா் ஆஜராகவில்லை. அதேபோல் ரூ.17,000 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கில் அமலாக்கத் துறை அவரிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கும்பகோணத்தில் அங்கன்வாடி பணியாளா் தற்கொலை முயற்சி

ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு தயாராகும் மதுரை மைதானம்!

கோவையில் பிரதமருடன் இன்று சந்திப்பா? செங்கோட்டையன் பதில்

இருசக்கர வாகனத்தில் போதை மாத்திரைகளை எடுத்துச் சென்றவா் கைது

பாஜக கூட்டணியில் விஜய் இணைவாா்: மு.அப்பாவு

SCROLL FOR NEXT