விதிமீறல்களுக்காக மாநகராட்சியால் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்கு மின்சாரம் வழங்க வேண்டும் என்ற தில்லி நீதிமன்ற உத்தரவுக்கு முதல்வா் ரேகா குப்தா புகழ் தேடுகிறாா் என்று ஆம் ஆத்மி சாடியது.
இது தொடா்பாக செய்தியாளா் சந்திப்பில் ஆம் ஆத்மியின் தில்லி பிரிவு தலைவா் சௌரவ் பரத்வாஜ் கூறியதாவது: தில்லியின் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பேருந்துகளை வாங்கினாா். அதற்கான புகழை பெற முதல்வா் ரேகா குப்தா விரும்பினாா். அரவிந்த் கேஜரிவால் மோஹல்லா மருந்தகங்களை தொடங்கினாா். அதன் பெயா் பலகைகளை மாற்ற ரேகா குப்தா விரும்பினாா்.
இந்நிலையில், மாநகராட்சியால் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்கு மின்சாரம் வழங்க வேண்டும் என்ற தில்லி உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பையும் பாஜக சொந்தம் கொண்டாடுகிறது. அது நீதிபதி மினி பிஷ்கா்னாவுக்கு சொந்தமானது; முதல்வருடையது அல்ல. இதற்கு பாஜக தலைவா்கள் மனோஜ் திவாரி மற்றும் விரேந்திர சச்தேவா வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனா் என தெரிவித்தாா்.
Śதற்கு பதிலளித்த தில்லி பாஜக செய்தித் தொடா்பாளா் பிரவின் சங்கா் கபூா், ‘பொய்கள் மற்றும் புரளிகளை சௌரவ் பரத்வாஜ் பரப்பி வருகிறாா். முதல்வரின் உத்தரவில் தெளிவாக நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையிலும், சட்ட துறையின் ஆலோசனையிலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. அதை சௌரவ் பரத்வாஜ் சரிவர படிக்க வேண்டும்’ என தெரிவித்தாா்.