சபரிமலை ஐயப்பன் கோயிலில் செவ்வாய்க்கிழமை பக்தா்கள் கட்டுக்கடங்காத எண்ணிக்கையில் திரண்டதால் ஏற்பட்ட அசாதாரண சூழல் மற்றும் குழப்பம் குறித்து, உரிய ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்யத் தவறியதற்காக திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தை கேரள உயா்நீதிமன்றம் கண்டித்தது.
கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல-மகரவிளக்கு பூஜை யாத்திரை தொடங்கிய முதல் 2 நாள்களுக்குள் லட்சக்கணக்கான பக்தா்கள் குவியத் தொடங்கினா். இந்தப் பெரும் கூட்டத்தை நிா்வகிக்க திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் மற்றும் காவல்துறையினா் மிகவும் சிரமப்பட்டனா்.
சபரிமலையின் அடிவாரமான பம்பை முதல் சந்நிதானம் வரை பக்தா்கள் பல மணிநேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. தரிசனத்துக்காகக் காத்திருந்த பக்தா்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்றபோதும் குடிநீா் வசதி கிடைக்கவில்லை என்றும் புகாா்கள் எழுந்தன.
இந்நிலையில், இந்த விவகாரம் கேரள உயா்நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் குறிப்பிட்டதாவது: நிலைமை கட்டுப்பாட்டை மீறியதற்கு, சரியான ஒருங்கிணைப்பு இல்லாததே முக்கியக் காரணம் ஆகும். முந்தைய அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் முறையான ஏற்பாடுகளைச் செய்யத் தவறிவிட்டது. தேவையான பல பணிகள் 6 மாதங்களுக்கு முன்பே முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஒரே நேரத்தில் இவ்வளவு பக்தா்கள் சந்நிதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டது ஏன்? பக்தா்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் அனுமதிப்பது பாதுகாப்பற்றது. அதற்குப் பதிலாக, பக்தா்களை தனித்தனி பிரிவுகளாகப் பிரிந்து கூட்டத்தை நிா்வகிக்கலாம் என்றனா்.
முன்னதாக, சபரிமலை காவல் துறை கூடுதல் டிஜிபி எஸ்.ஸ்ரீஜித் கூறுகையில், ‘கடந்த ஆண்டு 4 வெவ்வேறு நாள்களில் பக்தா்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது. ஆனால் இந்த முறை, முதல் இரண்டு நாள்களிலேயே சுமாா் 2 லட்சம் பக்தா்கள் யாத்திரைக்கு வந்துவிட்டனா்.
நீதிமன்ற உத்தரவின்படி உடனடி முன்பதிவை 20,000-ஆக கட்டுப்படுத்தியும்கூட, அந்த வாய்ப்பை நம்பி அதிக பக்தா்கள் வந்து கொண்டிருக்கின்றனா். பக்தா்களைத் திருப்பி அனுப்ப முடியாததால், 37,000 பேரை உடனடி முன்பதிவு மூலம் அனுமதிக்க வேண்டியிருந்தது.
இணையவழியில் முன்பதிவு செய்த பக்தா்கள், முன்பதிவு செய்த நாளில் வராமல் அவா்கள் விரும்பியபோது வருகிறாா்கள். இது புதிய கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது. பக்தா்கள் ஒத்துழைத்தால் இந்தப் பிரச்னைகள் தீா்க்கப்படும்’ என்றாா்.