அயர்லாந்தில், இந்தியர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு அயர்லாந்து அரசு கண்டனம் தெரிவிப்பதாக, இந்தியாவுக்கான அயர்லாந்தின் தூதர் கெவின் கெல்லி கூறியுள்ளார்.
அயர்லாந்து நாட்டில் இந்தியர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக காவல் துறையின் சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, இந்தியாவுக்கான அயர்லாந்தின் தூதர் கெவின் கெல்லி பிடிஐ நிறுவனத்துக்கு இன்று (நவ. 19) வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அயர்லாந்து அரசு இந்தியாவுடன் துணை நிற்பதாகக் கூறிய கெவின் கெல்லி, சமீபத்தில் இந்தியாவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக அயர்லாந்தின் துணைப் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோர் முதலாவதாகக் கண்டனம் தெரிவித்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுபற்றி, அவர் பேசியதாவது:
“பயங்கரவாதம் எங்களுக்கும் ஒன்றும் புதியதல்ல. எங்களுடைய அயர்லாந்து நாட்டில் பல ஆண்டுகளாக பயங்கரவாதத் தாக்குதல்களினால் நாங்கள் ரத்தம் சிந்தியுள்ளோம்” எனக் கூறியுள்ளார்.
இத்துடன், சமீப காலமாக அயர்லாந்தின் முக்கிய நகரங்களில் வசிக்கும் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இந்தத் தாக்குதல்கள் அனைத்திற்கும் அயர்லாந்து அரசு கண்டனம் தெரிவித்துள்ளதாகவும், இந்திய மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு அயர்லாந்து இனிமையான இடம் எனவும் கெவின் கெல்லி குறிப்பிட்டுள்ளார்.
அயர்லாந்தில் சுமார் 60,000-க்கும் அதிகமான இந்தியர்கள் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதில், கடந்த ஜூலை மாதம் முதல் அயர்லாந்திலுள்ள இந்திய தொழில் வல்லுநர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் 6 வயது சிறுமி ஆகியோர் மீதான தாக்குதல்கள் குறித்து 13 வழக்குகள் உறுதி செய்யப்பட்டதாக, இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: லெபனானில் பாலஸ்தீன அகதிகள் முகாமின் மீது இஸ்ரேல் தாக்குதல்! 13 பேர் பலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.