ஆம்ஸ்ட்ராங் கோப்புப்படம்
இந்தியா

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க இடைக்காலத் தடை

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த கே.ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

தினமணி செய்திச் சேவை

நமது நிருபர்

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த கே.ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் காவல் துறை விசாரணையில் பல குறைபாடுகள் இருப்பதாகக் கூறி வழக்கை சிபிஐ-க்கு மாற்றி 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட்ட பிறகும் வழக்கு தொடர்பான ஆவணங்களை தமிழக காவல் துறை சிபிஐ வசம் ஒப்படைக்கவில்லை. எனவே, காவல் துறை மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் இமானுவேல் ஆம்ஸ்ட்ராங் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, விஜய் பிஷ்னோய் அடங்கிய அமர்வு முன்பாக புதன்கிழமை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், முந்தைய வழக்கு விசாரணையின்போது சிபிஐ விசாரணையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டதுதானே என வினவினர். அதற்குப் பதிலளித்த தமிழக அரசின் மூத்த வழக்குரைஞர் சித்தார்த் லூத்ரா, கொலை வழக்கில் தமிழக காவல் துறை விசாரணை நடத்தி 7,400 பக்க குற்றப்பத்திரிகையை ஏற்கெனவே தாக்கல் செய்துவிட்டது. காவல் துறையே அனைத்து கோணங்களிலும் விசாரணையை முடித்துவிட்டது. எனவே, இந்த வழக்கை மீண்டும் சிபிஐ விசாரணை நடத்துவதற்கு எந்த அவசியமும் இல்லை' என்று குறிப்பிட்டார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் இமானுவேல் ஆம்ஸ்ட்ராங் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் யோகேஷ் கண்ணா, "இந்த வழக்கில் காவல் துறையினர் சரியாக விசாரணை நடத்தவில்லை. தமிழக காவல் துறை வழக்கை திசைதிருப்பும் நோக்கிலேயே செயல்பட்டுள்ளது. சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் வழக்கு ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைக்க மாநில காவல் துறை மறுத்து வருகிறது. இது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பாகும்' என்றார்.

இரு தரப்பு வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், எல்லா வழக்குகளையும் சிபிஐ விசாரிப்பது நடைமுறையில் சாத்தியம் இல்லாத விஷயம். அனைத்து வழக்குகளையும் சிபிஐ-யிடம் ஒப்படைக்கவும் முடியாது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. அடுத்த விசாரணை வரை இந்தத் தடை தொடரும் எனக் குறிப்பிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

பின்னணி: சென்னை பெரம்பூரில் உள்ள ஆம்ஸ்ட்ராங் வீடு அருகே அவரை 2024-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக 25-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர், வழக்கின் குற்றப்பத்திரிகையை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், காவல் துறையின் விசாரணை ஒருதலைப்பட்சமானது என்றும், சக்திவாய்ந்த நபர்களைக் காக்கும் நோக்கத்துடன் உள்ளது என்றும் குற்றஞ்சாட்டி ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் சிபிஐ விசாரணை கோரி வந்தனர். இந்த வழக்கை சென்னை காவல் துறை முறையாக விசாரிக்கத் தவறியதாகக் கூறி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் இமானுவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், இந்தக் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமரியில் கடற்கரைப் பகுதிக்கு செல்லத் தடை

வியாபாரி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு: போலீஸாா் விசாரணை

நடுவலூா் பகுதிகளில் நாளை மின்தடை

அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ரூ.5 லட்சத்தில் வேட்டி, சேலை, பூணூல் அளிப்பு

கருங்கல் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்

SCROLL FOR NEXT