2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன்னிலைப்படுத்துவதை எதிர்த்தவர்களில் நிதீஷ் குமாரும் ஒருவர்.
பாஜக - ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, பிகார் பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்று, இன்று பிகார் முதல்வராக நிதீஷ் குமார் பதவியேற்றுள்ளார்.
பிகாரில் இன்று பாஜக - ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி பலமாக உள்ளது. பிகார் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், முதல்வர் பதவியை ஐக்கிய ஜனதா தளத்துக்கு விட்டுக் கொடுத்துள்ளது. நிதீஷ் குமார் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
ஆனால், இந்தக் காட்சி அப்படியே தலைகீழாக இருந்தது 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது. அப்போது, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதை எதிர்த்த நிதீஷ் குமார், பிரதமர் வேட்பாளரை, கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்துதான் முடிவு செய்ய வேண்டும் என்று பாஜக தலைலைமைக்கு அறிவுறுத்தியிருந்தார். அதனை அப்போதைய கட்சித் தலைவர் நிதின் கட்கரியும் உறுதி செய்திருந்ததாகக் கூறப்படுகிறது.
அதுபோல, ஊடகம் ஒன்றுக்கு நிதீஷ் குமார் அளித்த நேர்காணலில், பிரதமர் வேட்பாளராக தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் ஒரு மதச்சார்பற்றவரைத்தான் முன்னிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்ததும், மறைமுகமாக பிரதமர் மோடிக்கு எதிராக நிதீஷ் குமார் இருப்பதையே காட்டியது.
2014ஆம் ஆண்டில், பாஜக பிரதமர் வேட்பாளராக மோடியை முன்னிறுத்தினால், பிகாரில் தனக்கு முஸ்லிம்களின் வாக்குகள் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் நிதீஷ் குமார், அவரை எதிர்த்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், பிரதமர் மோடிக்கு பாஜகவின் தரப்பிலிருந்து பலமான ஆதரவு இருந்ததால், பல்வேறு எதிர்ப்புகளையும் தாண்டி, பிரதமராகி, இரண்டாவது முறையும் வெற்றி பெற்று, இன்று பாஜகவின் சக்திவாய்ந்த் தலைவராகவும் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.