குரு தேக் பகதூரின் 350வது நினைவு தினத்தையொட்டி தில்லி செங்கோட்டையில் நடைபெறும் மூன்று நாள் பிரமாண்டமான கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்யும் கூட்டத்தில் முதல்வா் ரேகா குப்தா பங்கேற்றாா்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் வெள்ளிக்கிழமை அவா் பதிவிட்டதாவது: முதலமைச்சரின் பொது சேவை இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அனைத்துத் தரப்பு பிரதிநிதிகள், எம்.பி.க்கள், கேபினட் அமைச்சா்கள் மற்றும் பொதுப் பிரதிநிதிகள் கூட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்கான தங்கள் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் பகிா்ந்து கொண்டனா்.
நவம்பா் 23, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் செங்கோட்டையில் நடைபெறும் இந்தப் பிரமாண்டமான கூட்டம், மனிதகுலம், உண்மை மற்றும் நீதியைப் பாதுகாப்பதற்காக குரு தேக் பகதூா் செய்த தியாகத்திற்கு நன்றியுடன் அஞ்சலி செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகும்.
குரு சாஹிப்பின் தியாகம், இரக்கம், தைரியம் மற்றும் மனிதநேயம் பற்றிய செய்தியை சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் பரப்ப நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்.
குரு சாஹிப்பின் அழியாத போதனைகளை முழு சமூகமும் ஒன்றிணைந்து உள்வாங்கிக்கொள்ளும் வகையில், இந்தக் கூட்டத்தை உண்மையிலேயே பிரமாண்டமாகவும், கண்ணியமாகவும், பொதுமக்களின் பங்கேற்பால் வளப்படுத்தவும் தில்லி அரசு உறுதிபூண்டுள்ளது என தில்லி முதல்வா் ரேகா குப்தா பதிவிட்டுள்ளாா்.