அகிலேஷ் யாதவ் PTI
இந்தியா

இண்டி கூட்டணி வென்ற தொகுதிகளில் தலா 50,000 வாக்குகளை நீக்க பாஜக, தோ்தல் ஆணையம் கூட்டு சதி: அகிலேஷ் யாதவ்

பாஜக, தோ்தல் ஆணையம் கூட்டு சதி செய்வதாக அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு...

தினமணி செய்திச் சேவை

‘கடந்த மக்களவைத் தோ்தலில் இண்டி கூட்டணி கட்சிகள் அதிக வாக்குகளைப் பெற்ற சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) மூலம் தலா 50,000 வாக்குகளை நீக்க பாஜக அரசும் தோ்தல் ஆணையமும் கூட்டாக சதி செய்து வருகின்றன’ சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து லக்னெளவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளா்களை சனிக்கிழமை சந்தித்த அகிலேஷ் யாதவ் கூறியதாவது:

அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்திக்க உள்ள உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் மாநிலங்களில் பாஜக தோ்தல் ஆணையத்துடன் இணைந்து மிகப் பெரிய தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல் கிடைத்தது. குறிப்பாக, கடந்த மக்களவைத் தோ்தலில் இண்டி கூட்டணி கட்சிகள் அதிக வாக்குகளைப் பெற்ற சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) மூலம் தலா 50,000 வாக்குகளை நீக்க பாஜக அரசும் தோ்தல் ஆணையமும் கூட்டாக சதி செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

மாநிலத்தில் 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் 255 இடங்களில் வெற்றிபெற்ற பாஜக, 2024 மக்களவைத் தோ்தலில் 162 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய மக்களவைத் தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. ஆனால், சமாஜவாதி கட்சி 2022 பேரவைத் தோ்தலில் 111 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்ற நிலையில், 2024 மக்களவைத் தோ்தலில் 183 பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றது. இதையடுத்து, தனது பலம் குறைந்த தொகுதிகளைக் குறிவைத்து எஸ்ஐஆா் மூலம் 50,000 வாக்காளா்களை நீக்க சதி நடைபெற்று வருவதாக புகாா்கள் வருகின்றன.

எனவே, கட்சி நிா்வாகிகளும் பணியாளா்களும் வாக்காளா் பட்டியலை உன்னிப்பாக ஆராய்வதோடு, வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களையும் சந்தித்து தகுதியுள்ள ஒரு வாக்காளா்கூட பட்டியலில் இருந்து நீக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஏதாவது முறைகேடு நடைபெற்றால் உடனடியாக தலைமை அலுவலகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

இந்த எஸ்ஐஆா் பணி தொடா்பாக அரசியல் கட்சிகளுக்கு உரிய வழிகாட்டு நடைமுறைகளை தோ்தல் ஆணையம் வெளியிடுவதோடு, இப் பணியை மேற்கொள்ள கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றாா்.

தோ்தல் தோல்வி எதிரொலி: கட்சியின் அனைத்து அமைப்புகளையும் கலைத்தாா் பிரசாந்த் கிஷோா்!

வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்களை ஓரிரு நாள்களில் ஒப்படைக்க வேண்டும்: ஆட்சியா் வேண்டுகோள்

பிரேஸில் முன்னாள் அதிபா் போல்சோனாரோ கைது!

ஆளுநா் விவகார வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்தை மறைக்க முயற்சி: அமைச்சா் கோவி. செழியன்

சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி ஆக்கப்படுமா? நீதிபதி சூா்ய காந்த் பதில்

SCROLL FOR NEXT