சிறுபான்மையினர் வாக்குகளை நீக்க பாஜக முயற்சி: அகிலேஷ் குற்றச்சாட்டு!
வாக்காளர் நீக்க சதி நடப்பதாக அகிலேஷ் யாதவ் கூறுவது..
உத்தரப் பிரதேசத்தில் படிவம் 7-ஐ தவறாகப் பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்களை நீக்கச் சதி நடப்பதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில்,
பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் குற்றவாளிகளைப் போல நடந்துகொள்கின்றனர். போலியான ஆவணங்களின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் குறிப்பாகச் சிறுபான்மையினரின் வாக்குகளை நீக்குவதற்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் துன்புறுத்தப்படுவதாகவும், அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், அச்சுறுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
மேலும், வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஒருவர், தனக்கு ஏற்பட்ட துன்புறுத்தல்களை விவரிக்கும் காணொலியையும் அவர் பகிர்ந்துள்ளார்.
படிவம் 7 என்பது வாக்காளர் பட்டியலில் ஒருவரைச் சேர்ப்பதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவோ அல்லது ஏற்கெனவே பட்டியலில் உள்ள பெயரை நீக்கக் கோரவோ வாக்காளர்களால் பயன்படுத்தப்படும் படிவமாகும்.
இந்த படிவத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும், ஒவ்வொரு வாக்காளரின் வாக்களிக்கும் அரசியலமைப்பு உரிமையைப் பாதுகாக்க வேண்டும். இதற்கான உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிய அகிலேஷ் யாதவ் வலியுறுத்தினார்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை வற்புறுத்துபவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும், வழக்குகளை விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும், முறையான செயல்முறை அமல்படுத்தப்படும் வரை படிவம் 7-ஐப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்.
இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து படிவம் 7 விண்ணப்பங்களையும் ரத்த செய்ய வேண்டும், உரிமை கோரல்-ஆட்சேபனை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அவர் கோரினார்.
தேச விரோத சக்திகளை அடையாளம் காண நீதி விசாரணை நடத்த வேண்டும். நேர்மையான பத்திரிகையாளர்களும் அதிகாரிகளும் முன்வந்து, இத்தகைய சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் இணைய வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.