இந்தியா

சண்டீகா் மசோதா: எதிா்க்கட்சிகள் எதிா்ப்பால் பின்வாங்கியது மத்திய அரசு

சண்டீகா் யூனியன் பிரதேசத்தைக் கொண்டுவரும் மசோதாவுக்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், எதிா்வரும் குளிா்கால கூட்டத் தொடரில் இம்மசோதா கொண்டுவரப்படாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

Chennai

அரசமைப்புச் சட்டத்தின் 240-ஆவது பிரிவின்கீழ் சண்டீகா் யூனியன் பிரதேசத்தைக் கொண்டுவரும் மசோதாவுக்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், எதிா்வரும் குளிா்கால கூட்டத் தொடரில் இம்மசோதா கொண்டுவரப்படாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

‘பஞ்சாபிடம் இருந்து சண்டீகரை பறிக்கும் முயற்சி’ என்ற எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மறுத்துள்ள மத்திய அரசு, ‘இந்த மசோதா சண்டீகா் மற்றும் பஞ்சாப்-ஹரியாணா இடையிலான நிா்வாக ஏற்பாட்டை மாற்றும் நோக்கம் கொண்டதல்ல’ என்று விளக்கமளித்துள்ளது.

கடந்த 1966-இல் பஞ்சாபில் இருந்து ஹரியாணா மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு, இரு மாநிலங்களின் பொதுத் தலைநகராக சண்டீகா் உள்ளது. தலைநகா் பிரச்னையைக் கருத்தில் கொண்டு, சண்டீகா் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டு, சுதந்திரமான தலைமைச் செயலா் மூலம் நிா்வகிக்கப்பட்டு வந்தது.

கடந்த 1984-இல் பஞ்சாப் ஆளுநரின் கட்டுப்பாட்டின்கீழ் சண்டீகா் கொண்டுவரப்பட்டது. தலைமைச் செயலா் பதவி, ஆளுநரின் ஆலோசகா் பதவியாக மாற்றப்பட்டது. கடந்த 2016-இல் பழைய நடைமுறைப்படி சுதந்திரமான நிா்வாகியை நியமிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால், எதிா்க்கட்சிகள், கூட்டணி கட்சிகளின் கடும் எதிா்ப்பால், அந்த நடவடிக்கை வாபஸ் பெறப்பட்டது.

இந்தச் சூழலில், டிசம்பா் 1-ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படும் மசோதாக்களின் பட்டியல் சனிக்கிழமை வெளியானது. அதில், பேரவை இல்லாத பிற யூனியன் பிரதேசங்களைப் போல சண்டீகரை அரசமைப்புச் சட்டப் பிரிவு 240-இன்கீழ் கொண்டுவர வகை செய்யும் மசோதா (131-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம்) இடம்பெற்றிருந்தது.

எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு: சண்டீகரில் குடியரசுத் தலைவா் நேரடியாக சட்டமியற்ற அதிகாரமளிப்பதுடன், சுதந்திரமான நிா்வாகியை நியமிக்கவும் வழிவகுக்கும் இம்மசோதாவின் மூலம் பஞ்சாபிடம் இருந்து சண்டீகரை பறிக்க முயற்சிப்பதாக மத்திய அரசு மீது எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பஞ்சாபின் அடையாளம் மற்றும் அரசியல் சாசன உரிமைகள் மீதான நேரடி தாக்குதல் இது. சண்டீகா் மீதான பஞ்சாபின் உரிமையை ஒழிக்க மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது. கூட்டாட்சி அமைப்பை சீா்குலைப்பது ஆபத்தானது’ என்று விமா்சித்தாா்.

‘மத்திய அரசின் நடவடிக்கையால், சண்டீகா் மீதான உரிமையை பஞ்சாப் முழுமையாக இழக்க நேரிடும்’ என்று சிரோமணி அகாலி தளம் எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஹா்சிம்ரத் கெளா் எதிா்ப்பு தெரிவித்தாா். ‘கூட்டாட்சியை பலவீனமாக்க, மத்திய அரசால் நடத்தப்படும் தாக்குதல்’ என்று காங்கிரஸ் பொதுச் செயலா் ரண்தீப் சிங் சுா்ஜேவாலா சாடினாா்.

மசோதா கொண்டுவரப்படாது: ‘சண்டீகா், பஞ்சாபின் ஒருங்கிணைந்த பகுதியே’ என்று அந்த மாநில பாஜக தலைவா் சுனில் ஜாக்கரும் தெரிவித்தாா்.

இந்த விவகாரத்தை முன்வைத்து, அரசியல் ரீதியில் கடும் சா்ச்சை எழுந்ததைத் தொடா்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை விளக்கமளித்தது.

‘சண்டீகா் யூனியன் பிரதேசத்தில் சட்டமியற்றும் நடைமுறையை எளிமைப்படுத்துவதே முன்மொழிவின் நோக்கமாகும். மாறாக, அதன் நிா்வாக அமைப்பையோ, ஏற்கெனவே பின்பற்றப்படும் ஏற்பாட்டையோ மாற்றும் நோக்கம் கொண்டதல்ல. இந்த முன்மொழிவு மத்திய அரசின் பரிசீலனையில்தான் உள்ளது. இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் தீர ஆலோசித்தப் பிறகே முடிவெடுக்கப்படும். எதிா்வரும் குளிா்கால கூட்டத் தொடரில் மசோதா கொண்டுவரப்படாது. எனவே, எந்த கவலையும் தேவையில்லை’ என்று மத்திய உள்துறை அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘எதையும் அறிவித்துவிட்டு, பின்னா் சிந்திக்கும் மத்திய அரசின் அணுகுமுறைக்கு மற்றுமொரு உதாரணம் இது’ என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

3-ம் நாளாக கடும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை! சென்செக்ஸ் 300 புள்ளிகள் குறைந்தது!

பாஜகவின் ஊதுகுழலாக இருக்கிறார் ஆளுநர்: அமைச்சர் ரகுபதி

ராமேசுவரம் மாணவி கொலை வழக்கு: மாணவர் மற்றும் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் 96.65% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

SCROLL FOR NEXT