கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த ஸ்மிருதியின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுளளது.
இந்திய கிரிக்கெட் மகளிரணியின் துணை கேப்டனும், நட்சத்திர வீராங்கனையுமான ஸ்மிருதி மந்தனா, சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். 9 ஆட்டத்தில் ஆடிய மந்தனா ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 434 ரன்கள் குவித்தார்.
மகாராஷ்டிரத்தை சேர்ந்த 29 வயதான ஸ்மிருந்தி மந்தனா, பிரபல ஹிந்தி இசையமைப்பாளரான மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பலாஷ் முச்சலை நீண்ட காலமாக காதலித்து வருகிறார். பலாஷ் முச்சலுடன் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்துகொண்டதை விடியோ வெளியிட்டு ஸ்மிருதி மந்தனா அண்மையில் உறுதிபடுத்தியிருந்தார்.
இவர்கள் இருவருக்கும் இன்று(நவ. 23) திருமணம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சாங்லியின் சாம்டோலில் உள்ள மந்தனா பண்ணை வீட்டில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அவர் சாங்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தகவல் அறிந்ததும் ஸ்மிருதி மந்தனாவும் அவரது குடும்பத்தினரும் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்ததாக குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. தற்போது, அவரது உடல்நிலை சீராகவும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இன்று நடைபெறவிருந்த ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்து திருமணம் எப்போது நடைபெறும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. திருமணம் ஒத்திவைக்கப்பட்டதால் சாம்டோல் திருமண மண்டபத்தில் அலங்காரங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.
முன்னதாக ஸ்மிருதி மந்தனாவின் திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்திருந்த பிரதமர் மோடி இரு வீட்டாருக்கும் வாழ்த்து கடிதம் அனுப்பிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.