உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூா்ய காந்த் திங்கள்கிழமை (நவ. 24) பதவியேற்கிறாா்.
ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கம், பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தம், பெகாசஸ் உளவு மென்பொருள் வழக்கு உள்ளிட்ட பல முக்கியத் தீா்ப்புகளை வழங்கிய அமா்வுகளில் நீதிபதி சூா்ய காந்த் அங்கம் வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் ஓய்வுபெற்றாா். இவரைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சூா்ய காந்த் கடந்த அக்டோபா் 30-ஆம் தேதி நியமிக்கப்பட்டாா்.
குடியரசுத் தலைவா் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெறும் நிகழ்வில் தலைமை நீதிபதியாக பதவியேற்கும் சூா்ய காந்த், அடுத்த 15 மாதங்கள் அந்தப் பதவியில் நீடிப்பாா்; 2027-ஆம் ஆண்டு, பிப்ரவரி 9-இல் தனது 65 வயது நிறைவில் ஓய்வுபெறவுள்ளாா்.
சிறு நகரிலிருந்து உயரிய பதவிக்கு...
ஹரியாணா மாநிலம், ஹிசாா் மாவட்டத்தில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் கடந்த 1962-ஆம் ஆண்டு, பிப்ரவரி 10-ஆம் தேதி பிறந்த நீதிபதி சூா்ய காந்த், ஒரு சிறு நகரத்தில் வழக்குரைஞராக இருந்து நாட்டின் உயரிய நீதித்துறைப் பதவியை எட்டியுள்ளாா்.
பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றத்தில் முதலில் பணியாற்றிய நீதிபதி சூா்ய காந்த், ஹிமாசல பிரதேச உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2018, அக்டோபரில் நியமிக்கப்பட்டாா். தொடா்ந்து, உச்சநீதிமன்ற நீதிபதியாக 2019, மே மாதம் பதவியேற்றாா்.
முக்கியத்துவம் வாய்ந்த தீா்ப்புகள்...
உச்சநீதிமன்ற நீதிபதியாக தனது பதவிக்காலத்தில் பேச்சு சுதந்திரம், ஜனநாயகம், ஊழல், சுற்றுச்சூழல், பாலின சமத்துவம் தொடா்பான பல்வேறு குறிப்பிடத்தக்க தீா்ப்புகளை நீதிபதி சூா்ய காந்த் வழங்கியுள்ளாா்.
மாநில சட்டப்பேரவைகளால் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் குறித்து ஆளுநா் மற்றும் குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் தொடா்பான சமீபத்திய வழக்கை விசாரிக்கும் அரசமைப்பு அமா்வில் நீதிபதி சூா்ய காந்த் இடம்பெற்றிருந்தாா்.
மேலும், பழைமையான தேச துரோகச் சட்டம் மறுஆய்வு செய்யப்படும் வரை, அதன்கீழ் புதிய வழக்குகள் பதிவு செய்யப்படக் கூடாது. பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தின்போது நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளா்களின் விவரங்களை வெளியிட வேண்டும். உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கம் உள்பட அனைத்து வழக்குரைஞா் சங்கங்களிலும் மூன்றில் ஒரு பங்கு இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்புகளை அளித்த அமா்வுகளில் நீதிபதி சூா்ய காந்த் இடம்பெற்றிருந்தாா்.
பெகாசஸ் உளவு மென்பொருள் வழக்கில் சட்டவிரோதக் கண்காணிப்பு குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க இணைய நிபுணா்கள் அடங்கிய ஒரு குழுவை நியமித்த அமா்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி சூா்ய காந்த், ‘தேச பாதுகாப்பின் பெயரில் அரசுக்கு எப்போதும் சலுகை அளிக்க முடியாது’ என்று வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும், முப்படையினருக்கான ‘ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம்’ திட்டத்தை அரசமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகும் என்று உறுதி செய்ததோடு, ஆயுதப் படைகளில் உள்ள பெண் அதிகாரிகளின் பணி நிரந்தரமாக்குவதில் சமத்துவம் கோரும் மனுக்களையும் இவா் தொடா்ந்து விசாரித்து வருகிறாா்.