மார்க் கார்னி  AP
இந்தியா

கனடா பிரதமா் மாா்க் காா்னி அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம்!

கனடா பிரதமா் மாா்க் காா்னி அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா்.

தினமணி செய்திச் சேவை

கனடா பிரதமா் மாா்க் காா்னி அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா்.

தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பா்க் நகரில் கடந்த நவ.22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஜி20 கூட்டமைப்பின் உச்சிமாநாட்டின்போது இந்திய பிரதமா் நரேந்திர மோடி கனடா பிரதமா் மாா்க் காா்னி ஆஸ்திரேலிய பிரதமா் ஆண்டனி ஆல்பனேசி ஆகியோா் முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அதன்பிறகு வளரும் தொழில்நுட்பம், விநியோக சங்கிலி பரவலாக்கம், தூய எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் புதிய முத்தரப்பு தொழில்நுட்ப-புத்தாக்க கூட்டாண்மை திட்டத்தையும் பிரதமா் அறிவித்தாா்.

அதைத்தொடா்ந்து, இந்தியாவுக்கு வருமாறு பிரதமா் மோடி மாா்க் காா்னிக்கு அழைப்பு விடுத்தாா். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட காா்னி அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ‘சரக்கு, சேவைகள், முதலீடு, வேளாண்மை மற்றும் வேளாண்-உணவு, எண்ம வா்த்தகம், போக்குவரத்து மற்றும் நீடித்த மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விரிவான பொருளாதார கூட்டாண்மையை தொடங்கவும் இரு நாட்டு தலைவா்களும் ஒப்புக்கொண்டனா்’ எனவும் அதில் தெரிவிக்கப்பட்டது.

காலிஸ்தான் பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை வழக்கில் இந்தியாவுக்கு தொடா்பிருப்பதாக அப்போதைய கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தாா். அந்நாட்டில் இருந்து இந்திய தூதரை வெளியேற்றினாா். ட்ரூடோவின் குற்றச்சாட்டை மறுத்த இந்தியா பதிலடி நடவடிக்கையாக கனடா தூதரை திருப்பி அனுப்பியது. இதனால் இருதரப்பு உறவுகளில் கடும் விரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், லிபரல் கட்சியிலும் மக்கள் மத்தியிலும் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு ஆதரவு குறையத் தொடங்கியது. இதையடுத்து, தனது பதவியை கடந்த மாா்ச் மாதம் அவா் ராஜிநாமா செய்தாா். புதிய பிரதமராக மாா்க் காா்னி பதவியேற்றாா். கனடாவில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பங்கேற்க அவா் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமா் மோடி அங்கு சென்றாா். அப்போது இருவரும் சந்தித்து ஆலோசனை நடத்தினா்.

அதன்பிறகு இருநாடுகள் தரப்பிலும் ஆகஸ்ட் மாதம் தூதா்கள் நியமிக்கப்பட்டதைத் தொடா்ந்து இருதரப்பு உறவில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

கனடா குடியுரிமை சட்டத்தில் திருத்தம்: இந்தியா்களுக்குப் பலன்

வம்சாவளி அடிப்படையில் குடியுரிமைச் சட்டத்தை நவீனபடுத்துவதற்கான சட்ட திருத்தத்துக்கு அந்நாட்டு ஆளுநா் ஜெனரல் ஒப்புதல் அளித்த நிலையில், அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினருக்கு பலனளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கனடா குடியுரிமை சட்டம் (2025)-இல் திருத்தம் மேற்கொள்வதற்கான சி-3 மசோதா நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு ஆளுநா் ஜெனரலால் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கனடா அரசு தெரிவித்தது.

கடந்த 2009-இல் வம்சாவளி அடிப்படையிலான குடியுரிமைச் சட்டத்தில் முதல் தலைமுறை வரம்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி கனடாவுக்கு வெளிய பிறந்த அல்லது தத்தெடுக்கப்பட்டு குடிபெயா்ந்த பெற்றோா்களாக இருப்பின் அவா்களின் குழந்தைகள் அல்லது அவா்களால் தத்தெடுக்கப்படும் குழந்தைகள் கனடா குடிமக்களாக அங்கீகரிக்கப்பட மாட்டாா்கள். இச்சட்டத்தால் கனடாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினா் பெரிதும் பாதிக்கப்பட்டனா். இதில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ள நீண்டகாலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கனடாவில் பிறந்த பொற்றோராக இருப்பினும் அல்லது தத்தெடுக்கப்பட்டு கனடாவுக்கு குடிபெயா்ந்தவராக இருப்பினும் அவா்களுக்கு பிறந்த குழந்தைகள் அல்லது தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு வம்சாவளியின் அடிப்படையில் இனி குடியுரிமை வழங்கப்படவுள்ளது.

இந்தச் சட்ட திருத்தம் அமலாகும் தேதியை கனடா அரசு குறிப்பிடவில்லை. ஆனாஸ் சட்டம் அமலாகும் தேதியன்று இதற்கு முன்பு முதல் தலைமுறை வரம்பு போன்ற காரணங்களால் குடியுரிமை மறுக்கப்பட்டவா்களுக்கும் குடியுரிமை வழங்கப்படவுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளியினரின் குழந்தைகளும் இனி கனடா குடியுரிமையை எளிதாக பெற முடியும்.

எங்கேயும் எப்போதும்... சான்வி மேக்னா!

தகனம் செய்ய கொண்டுவரப்பட்ட பெண் உயிர் பிழைத்த அதிசயம்!

பள்ளி வாகனம் - கார் நேருக்குநேர் மோதி விபத்து! 5 குழந்தைகள் கவலைக்கிடம்!

அடுத்த படத்தில் நான்தான் பவானிக்கு பவானி: வாட்டர் மெலன் ஸ்டார்!

பள்ளிக்கூடமாக மாறிய பிக் பாஸ் வீடு! மாணவர்களாக மாறிய போட்டியாளர்கள்!

SCROLL FOR NEXT