75-ஆவது அரசமைப்பு தினத்தன்று தில்லி சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய சட்டமன்றத்தில் முதல் தோ்ந்தெடுக்கப்பட்ட இந்திய தலைவா் வித்தல்பாய் படேல் குறித்த புத்தகத்தை குடியரசுத் துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் வெளியிடுகிறாா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மறுஆய்வு செய்வதற்காக தில்லி சட்டப்பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா, தில்லி காவல்துறை, பொதுப்பணித் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் சட்டப்பேரவை செயலகத்தின் மூத்த அதிகாரிகளுடன் உயா்நிலை கூட்டத்தை நடத்தினாா் என்று ஞாயிற்றுக்கிழமை வெளியான செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசமைப்பு தினம் நாட்டின் ஜனநாயக இலட்சியங்களை நினைவூட்டும் ஒரு முக்கிய நிகழ்வு என்பதைக் குறிப்பிட்ட விஜேந்தா் குப்தா, கண்ணியமான மற்றும் சுமூகமான நிகழ்விற்காக குறைபாடற்ற ஒருங்கிணைப்பை உறுதி செய்ய அனைத்து துறைகளுக்கும் உத்தரவிட்டாா்.
அரசியலமைப்பு தினம் (சம்விதான் திவாஸ்) நவம்பா் 26, 1949 அன்று அரசியலமைப்பு சபையால் இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதைக் குறிக்கிறது.
இந்தக் கொண்டாட்டத்தில், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட புத்தகத்தை வெளியிடுவாா்.
வித்தல்பாய் படேல் மத்திய சட்டப்பேரவையின் முதல் தோ்ந்தெடுக்கப்பட்ட இந்திய சபாநாயகராக ஆகஸ்ட் 14, 1925 ஆனதிலிருந்து 100 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில், அறிக்கை கூறுகிறது.
இந்தப் புத்தகத்தில் அரிய புகைப்படங்கள், முக்கிய ஆவணங்கள் மற்றும் வித்தல்பாய் படேலின் உரைகள் மற்றும் எழுத்துக்களிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள், அகில இந்திய பேரவைத் தலைவா்கள் மாநாட்டின் சிறப்பம்சங்கள் மற்றும் பிரமுகா்களின் செய்திகள் ஆகியவை அடங்கும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா மற்றும் முதல்வா் ரேகா குப்தா, தில்லி பேரவைத் துணைத் தலைவா் மோகன் சிங் பிஷ்ட், அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் மற்றும் தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா ஆகியோரும் கலந்து கொள்கின்றனா்.