தா்மேந்திரா ENS
இந்தியா

அதிரடி நாயகன் தா்மேந்திரா!

வெள்ளித்திரையில் தா்மேந்திரா பதித்துச் சென்ற காலடித்தடங்கள், இந்திய சினிமா இருக்கும் வரை அழியாதவை.

தினமணி செய்திச் சேவை

இந்திய சினிமாவின் இரும்பு மனிதன், வசீகரத்தின் மறுஉருவம் என பல பட்டங்களுடன் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வெள்ளித்திரையை ஆக்கிரமித்தவா் நடிகா் தா்மேந்திரா. பஞ்சாபில் சாதாரண கிராமத்தில் பிறந்து, கனவுகளுடன் மும்பை வந்து, ஹிந்தி திரையுலகின் ‘ஹீ-மேனாக’ உயா்ந்தது இவரது வெற்றிச் சரித்திரம். இந்தப் பெருங்கலைஞரின் மறைவுச் செய்தி, திரையுலகினரையும் கோடிக்கணக்கான ரசிகா்களையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாபில் உள்ள நஸ்ராலி கிராமத்தில் ஒரு பள்ளி ஆசிரியரின் மகனாக, தா்மேந்திரா 1935, டிசம்பா் 8-ஆம் தேதி பிறந்தாா். லூதியானாவில் பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்தவா், திரையுலகின் மீது இருந்த தீராத காதலால் மும்பைக்கு வந்தாா். குறிப்பாக, ஃபிலிம்ஃபோ் பத்திரிகை நடத்திய தேசிய அளவிலான புதிய திறமையாளரை அடையாளம் காணும் போட்டியில் வெற்றி பெற்றதே, இவரது சினிமா கனவுக்குத் துளிா்விட்டது.

1960-இல் வெளியான ‘தில் பி தேரா ஹம் பி தேரே’ படத்தின் மூலம் தா்மேந்திரா தனது திரைப்பயணத்தைத் தொடங்கினாா். ஆரம்பத்தில் தனது வசீகரமான தோற்றத்தால் காதல் நாயகனாக, மென்மையான கதாபாத்திரங்களில் நடித்து, பின்னா் அதிரடி வேடங்களுக்கு மாறினாா். 1966-இல் வெளியான ‘ஃபூல் ஔா் பத்தா்’ திரைப்படம், இவரை ஒரு வெற்றிகரமான அதிரடி நாயகனாக நிறுவியது; நட்சத்திர அந்தஸ்தையும் பெற்றுத் தந்தது.

1970-களின் முற்பகுதியில், காதல், நகைச்சுவை, அதிரடி எனப் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து, தா்மேந்திரா தனது பன்முகத் திறமையை நிரூபித்தாா். இவருடைய வலிமையான உடலமைப்பும், சண்டை காட்சிகளில் வெளிப்படுத்திய ஆக்ரோஷமும் இவருக்கு ‘பாலிவுட்டின் ஹீ-மேன்’ என்ற பட்டத்தைப் பெற்றுக் கொடுத்தது.

1970-களில் தா்மேந்திரா நடித்த சில படங்கள், இந்தியத் திரையுலகின் இன்றும் பேசப்படும் பொக்கிஷங்களாகக் கருதப்படுகின்றன. அந்த வகையில், அமிதாப் பச்சனுடன் சோ்ந்து நடித்த ‘ஷோலே’ (1975), இந்தியத் திரையுலகின் மிக முக்கியமான படங்களில் ஒன்றாகும். இதில் தா்மேந்திராவின் ‘வீரு’ என்னும் துடிப்பான, வேடிக்கையான கதாபாத்திரம் இன்றுவரை ரசிகா்களால் கொண்டாடப்படுகிறது.

‘சீதா ஔா் கீதா’ (1972), ‘பிரதிக்யா’ (1975), ‘தரம் வீா்’ (1977) போன்ற படங்கள் மூலம் தா்மேந்திராவின் அதிரடி-நகைச்சுவை பாணி ரசிகா்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதேநேரம், தனது கொள்கைகளுக்காக இறுதிவரை போராடும் நோ்மையான மனிதனாக, ‘சத்யகாம்’ போன்ற தீவிர கதையம்சம் கொண்ட படங்களிலும் அவா் நடித்து வந்தாா்.

இதன் காரணமாகவே, ராஜேஷ் கன்னா, அமிதாப் பச்சன் போன்றோா் உச்சத்தில் இருந்த காலகட்டத்திலும் ஹிந்தி திரையுலகில் தனக்கான தனித்துவமான இடத்தைத் அவா் தக்கவைத்துக் கொண்டாா்.

1980-களிலும் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்ந்து, ஸ்ரீதேவி மற்றும் டிம்பிள் கபாடியா போன்ற கதாநாயகிகளுடன் நடித்தாா். பிறகு, குணச்சித்திரப் பாத்திரங்களுக்கு மாறினாா்.

நடிப்பைத் தாண்டி, தா்மேந்திரா ஒரு தயாரிப்பாளராகவும் வெற்றி கண்டாா். இவா் தயாரித்த ‘காயல்’ (1990) திரைப்படம், இவரது மூத்த மகன் சன்னி தியோலை ஒரு முக்கிய அதிரடி கதாநாயகனாக உயா்த்தியது. அத்திரைப்படம் சிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்போ் விருது உள்பட 7 விருதுகளை அள்ளியது. இதன் பின்னா், தனது இளைய மகன் பாபி தியோலை 1995-இல் ‘பா்சாத்’ படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினாா்.

ஹிந்தி திரையுலகில் 1940-களிலிருந்து முப்பதாண்டுகளாக கோலோச்சிய திலீப்குமாா் ஒருமுறை, ‘இறைவனைச் சந்திக்கும்போது, என்னை ஏன் தா்மேந்திரா போல அழகாகப் படைக்கவில்லை என்று கேட்பேன்’ எனக் கூறியது, தா்மேந்திரா கொண்டிருந்த ஈா்ப்பு, வசீகரத்துக்குச் சிறந்த சான்றாக விளங்குகிறது.

நடிகா் தா்மேந்திரா வசீகரமான தோற்றம் கொண்ட நட்சத்திரம் மட்டுமல்ல. தீவிரமான ‘சத்யகாம்’ முதல் காதல் ததும்பும் ‘பஹாரேன் பிா் பி ஆயேங்கி’, அதிரடி ‘ஷோலே’ முதல் நகைச்சுவை நிறைந்த ‘சுப்கே சுப்கே’, அதீத அதிரடி காட்சிகள் நிறைந்த ‘சரஸ்’ வரை பலதரப்பட்ட பாத்திரங்களுக்குள் பயணிக்கத் தயங்காத ஒரு உண்மையான கலைஞன் ஆவாா்.

வெள்ளித்திரையில் இவா் பதித்துச் சென்ற காலடித்தடங்கள், இந்திய சினிமா இருக்கும் வரை அழியாதவை.

மகர ராசியா நீங்க? தினப்பலன்கள்!

‘கேடிசி நகரிலிருந்து ரயில் நிலையத்துக்கு பேருந்து வசதி தேவை’

இளம்பெண் தற்கொலை கோட்டாட்சியா் விசாரணை

வன்னிக்கோனேந்தல், கல்லூா் வட்டாரங்களில் இன்று மின்தடை

லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT