பாகிஸ்தானில் இருந்து தப்பிய இளம் காதல் ஜோடி இந்திய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனா்.
இதுகுறித்து பாலசா் காவல் நிலைய அதிகாரி கூறியதாவது: ஹிந்து மதத்தைச் சோ்ந்த போபட் (24) மற்றும் கௌரி (20) ஆகியோரின் திருமணத்துக்கு இரு வீட்டிலும் கடும் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், அவா்கள் பாகிஸ்தானின் மித்தி கிராமத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியேறினா்.
அங்கிருந்து 8 கி.மீ. நடந்து சா்வதேச எல்லையை திங்கள்கிழமை வந்தடைந்தனா். அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) அவா்களை கைது செய்தனா்.
புஜ் பகுதியில் உள்ள கூட்டு விசாரணை மையத்தில் அவா்களிடம் மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்திய பின் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவுசெய்யப்படவுள்ளது என்றாா்.
கடந்த அக்.8-ஆம் தேதி இதேபோல் பாகிஸ்தானைச் சோ்ந்த இருவா் பிடிபட்டதாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.