மிகவும் அரிதிலும் அரிதாக, மத்திய பிரதேச மாநிலம் பன்னா புலிகள் சரணாலயத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பெண் யானை இரட்டைக் குட்டிகளை ஈன்றுள்ளது.
பன்னா புலிகள் சரணாலயத்தில் பராமரிக்கப்பட்டு வரும் 57 வயதான பெண் யானை அனார்கலி கடந்த சனிக்கிழமை, இரட்டைப் பெண் குட்டிகளை ஈன்றுள்ளது, அரிய நிகழ்வாக மாறியிருக்கிறது.
வனவிலங்குகள் நல நிபுணர்கள், கால்நடை மருத்துவர்களின் கண்காணிப்பில் குட்டிகள் ஈன்றெடுக்கப்பட்டதாகவும், குட்டிகளும் தாயும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இயற்கையின் அதிசயம் என்றும், அரிதிலும் அரிதான நிகழ்வு என்றும் வனவிலங்குகள் நல ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
உலகம் முழுவதும் புலிகளின் சிறந்த பராமரிப்பால் அதிகம் புகழப்படும் பன்னா புலிகள் சரணாலயத்தில் யானைகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. தற்போது இரட்டைக் குட்டிகளுடன் யானைகளின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது, சரணாலய ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பெண் யானை அனார்கலிக்கு அதிக ஊட்டச்சத்து உள்ள உணவுகள், கரும்புகள், வெள்ளம், சுத்தமான நெய்யால் செய்யப்பட்ட லட்டுகள் செய்யப்பட்டு அளிக்கப்பட்டு வருகிறது. யானையை பராமரிக்கவென்று ஒரு தனி குழுவும், குட்டிகளைப் பராமரிக்க தனிக் குழுவும் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை அனார்கலி 6 முறை குட்டிகளை ஈன்றுள்ளதாகவும், சரணாலய வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை, இரட்டைக் குட்டிகள் ஈன்றெடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார்கள்.
இதற்கு முன்பு, தமிழகத்தில் உள்ள முதுமலை புலிகள் சரணாயலத்தில் பராமரிக்கப்பட்டு வந்த தேவகி என்ற பெண் யானை, 1971ஆம் ஆண்டு, இரட்டை ஆண் குட்டிகளை ஈன்றெடுத்திருந்ததாகவும் அவற்றுக்கு விஜய், சுஜய் என்று பெயரிடப்பட்டதாகவும் ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க.. என்ன ஆனது இம்ரான் கானுக்கு? சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.