முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரின் குடும்பத்தினர் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அநீதி இழைத்ததாக, மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தூரில், சர்தார் வல்லபாய் படேலின் 150 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இன்று (நவ. 26) நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், நேரு மற்றும் காந்தியின் குடும்பத்தினர் மற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அநீதி இழைத்ததாகவும், சர்தார் வல்லபாய் படேல் உள்ளிட்டோரின் வரலாற்றை அழிக்க முயன்றதாகவும் கூறியுள்ளார்.
இதுபற்றி, அவர் பேசியதாவது:
“காங்கிரஸின் நேரு மற்றும் காந்தி ஆகியோரின் குடும்பங்கள் இந்தியா சுதந்திரம் பெறுவதற்காகப் பணியாற்றி மாபெரும் மனிதர்களுக்கு எதிராகச் சதி செய்து அவர்களுக்கு அநீதி இழைத்தனர்.
மேலும், அவர்களின் வரலாற்றை அழிக்க முயன்றனர். அந்த மாபெரும் மனிதர்களில் சர்தார் வல்லபாய் படேல் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரும் அடங்குவார்கள்.
சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய மக்கள் படேலை பிரதமராக ஏற்றுக்கொண்டிருப்பார்கள். ஆனால், மகாத்மா காந்தியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின் அவர் பணிவுடன் பின்வாங்கிக் கொண்டார்” எனப் பேசியுள்ளார்.
இத்துடன், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் குஜராத்தில் வல்லபாய் படேலின் மிகப் பெரிய சிலையானது திறக்கப்பட்டது எனவும்; இதன்மூலம், நூற்றாண்டுகள் கடந்தும் அவரது புகழ் நிலைத்திருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: ஒரு கிலோ ஒரு ரூபாய்! வெங்காயத்துக்கு இறுதிச் சடங்கு! விலை வீழ்ச்சி ஏன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.