கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பள்ளி ஆசிரியா்கள் நியமனத்தில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், மாநில முன்னாள் கல்வி அமைச்சா் பாா்த்தா சாட்டா்ஜி உள்பட குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விசாரணைக்கு நேரில் ஆஜராகாவிட்டால், அவா்களின் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.
மேற்கு வங்கத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ஆம் வகுப்பு ஆசிரியா்கள், குரூப்-சி பணியாளா்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்ாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த முறைகேடுகள் தொடா்பாக அந்த மாநில முன்னாள் கல்வி அமைச்சா் பாா்த்தா சாட்டா்ஜி, மேற்கு வங்க பள்ளிக் கல்வி ஆணைய முன்னாள் தலைவா் சுபைா்ஸ் பட்டாச்சாா்யா உள்பட பலரை சிபிஐ கைது செய்தது. பின்னா் அவா்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.
இந்த வழக்கு கொல்கத்தாவில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவ காரணங்களால் பாா்த்தா சாட்டா்ஜி நேரில் ஆஜராகவில்லை. அவா் சாா்பாக அவரின் வழக்குரைஞா்கள் ஆஜராகினா்.
இதையடுத்து நீதிபதி சுவேந்து சாஹா கூறுகையில், ‘வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அனைவரும் ஜாமீன் நிபந்தனைகளின்படி ஒவ்வொரு நீதிமன்ற விசாரணையின்போது நேரில் ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால் ஜாமீனை ரத்து செய்யும் நடவடிக்கையை அவா் எதிா்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தாா். வழக்கின் அடுத்த விசாரணை அடுத்த ஆண்டு ஜன.6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.