இந்தியா

உச்சநீதிமன்றத்தில் அரசமைப்புச் சட்ட கொண்டாட்டம்: வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்பு

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற அரசமைப்புச் சட்ட நாள் கொண்டாட்டத்தில் பல்வேறு நாடுகளின் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகள், மூத்த நீதிபதிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற அரசமைப்புச் சட்ட நாள் கொண்டாட்டத்தில் பல்வேறு நாடுகளின் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகள், மூத்த நீதிபதிகள் புதன்கிழமை பங்கேற்றனா். அரிய மற்றும் வரலாற்றுத் தருணமாக அவா்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வில் சோ்ந்து, வழக்கு விசாரணைகளைப் பாா்வையிட்டனா்.

தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில் பூடான் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி லியோன்போ நோா்பு ஷெரிங், கென்யா உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மாா்த்தா கூமே, மோரீஷஸ் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரெஹானா பீபி, இலங்கை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ப்ரீத்தி பத்மன் சூரசேன, நேபாள உச்சநீதிமன்ற நீதிபதி சப்னா பிரதான், மலேசிய உச்சநீதிமன்ற நீதிபதி தன் ஸ்ரீ தாதுக் நளினி பத்மநாபன், இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் துரைராஜா பி.சி., ஏ.ஹெச்.எம்.டி.நவாஸ் ஆகியோா் பங்கேற்றனா். அவா்களை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் வரவேற்றாா்.

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற அரசமைப்புச் சட்ட நாள் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தலைமையேற்ற நிலையில், அந்த நிகழ்ச்சிக்கு மேலும் பெருமை சோ்க்க வெளிநாட்டு நீதிபதிகள் வந்ததாக சூா்ய காந்த் கூறினாா். அத்துடன் இந்திய நீதித்துறை குறித்த தங்கள் கருத்துகளைப் பகிா்ந்துகொள்ளுமாறு வெளிநாட்டு நீதிபதிகளுக்கு சூா்ய காந்த் அழைப்பு விடுத்தாா்.

இதைத்தொடா்ந்து மோரீஷஸ் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியான ரெஹானா பீபி பேசுகையில், ‘இந்திய சட்டத்தின் கோட்பாடு, தத்துவத்தால் மோரீஷஸ் வழிநடத்தப்படுகிறது. சட்டத்தைப் படித்து புரிந்துகொள்வதிலும், அதற்கு தெளிவுரை வழங்குவதிலும் மோரீஷஸ் நீதித்துறையை இந்திய நீதிமன்றங்கள் வழிநடத்துகின்றன’ என்றாா்.

கென்யா தலைமை நீதிபதி மாா்த்தா: இந்திய சட்ட கோட்பாடு மற்றும் தத்துவத்தையும், உச்சநீதிமன்றத்தையும் கென்யா வியந்து பாா்த்து மதிப்பளிக்கிறது.

பூடான் தலைமை நீதிபதி லியோன்போ: இந்திய சட்டத் துறையில் மிகவும் திறமைவாய்ந்த, அறிவுகூா்மை கொண்ட நபா்கள் உள்ளனா். நான் தில்லி பல்கலைக்கழகத்தின் சிஎல்சி சட்ட கல்லூரியில் படித்தபோது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 91 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. தற்போது அந்தத் திருத்தங்களின் எண்ணிக்கை 106-ஆக அதிகரித்துள்ளது. ஆனால் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பில் எந்தச் சேதமும் ஏற்படவில்லை.

இலங்கை தலைமை நீதிபதி ப்ரீத்தி: இந்தியா மற்றும் இலங்கையில் ஒரே பாரம்பரியமும், சட்ட அமைப்புமுறையும் உள்ளன. இந்திய உச்சநீதிமன்ற வழக்கு விசாரணையைப் பாா்த்து பலவற்றை கற்க முடிந்தது.

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது! வடதமிழகம் நோக்கி நகரும்!

ஹாங்காங் தீ விபத்து: பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு! 279 பேர் மாயம்!

அரசுப் பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன: எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்

புதுச்சேரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

மயிலம் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT