இந்தியா

குருகிராம்: போக்குவரத்து காவல் அதிகாரியிடம் பணம் பறிக்க முயற்சி! இரு போலி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கைது!

லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளாக நடித்து போக்குவரத்து காவல் துறை அதிகாரியிடம் பணம் பறிக்க முயற்சித்த இருவா் கைதுசெய்யப்பட்டனா்.

தினமணி செய்திச் சேவை

லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளாக நடித்து போக்குவரத்து காவல் துறை அதிகாரியிடம் பணம் பறிக்க முயற்சித்த இருவா் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கைதுசெய்யப்பட்ட நபா்களில் ஒருவா் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

குருகிராமின் மேஃபீல்டு காா்டன் சிக்னலில் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல் துறை மண்டல அதிகாரி அளித்த புகாரைத் தொடா்ந்து இந்த நவடிக்கை எடுக்கப்பட்டது.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: புகாரளித்த அதிகாரி கடந்த அக்.15-ஆம் தேதி பணியில் இருந்த போது, காரில் வந்த இரு நபா்கள் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் என அறிமுகப்படுத்தினா். இதன் பிறகு அருகில் உள்ள காவல் நிலைய சாவடிக்கு உடன் வருமாறு அவரை அழைத்தனா். அங்கு சென்ற பிறகு போக்குவரத்து காவல் அதிகாரிக்கு எதிராக லஞ்ச புகாா்கள் வந்ததாகக் கூறிய அந்த நபா்கள், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க பணம் தருமாறு கேட்டுள்ளனா். இதற்கு அந்த அதிகாரி மறுத்துவிட்டாா்.

அன்றைய நாள் இரவில் வந்த விடியோ அழைப்பில் பேசிய அந்த நபா்கள் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்தனா். இதைத்தொடா்ந்து, போக்குவரத்து காவல் அதிகாரி காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

இது தொடா்பாக நடைபெற்ற விசாரணையின்போது, லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளாக நடித்து பணம் பறிக்க முயன்ற நபா்கள் ஹரியாணாவைச் சோ்ந்த தீபக் மற்றும் நேபாளத்தில் வசிக்கும் நிதீன் குமாா் எனத் தெரியவந்தது. அவா்கள் இருவரும் செக்டாா் 30 பகுதியில் செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டனா்.

விசாரணையில், அவா்கள் இருவரும் தேசியத் தலைநகா் பிராந்தியத்தில் இதுபோன்று 7 குற்றங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

தில்லி, உத்தர பிரதேசம், குருகிராம் ஆகிய பகுதிகளில் பாலியல் வன்கொடுமை, திருட்டு உள்பட பல குற்ற வழக்குகள் நிதீன் குமாருக்கு எதிராகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்ததாக குருகிராம் காவல் துறையின் செய்தித்தொடா்பாளா் தெரிவித்தாா். தீபக்குக்கு எதிராக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சாத்தான்குளம் பள்ளியில் மனநல திட்ட பயிற்சி முகாம்

பெரியதாழையில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

சாத்தான்குளத்தில் டிச. 4, 5இல் படி தராசுகளுககு முத்திரையிடும் முகாம்

தட்டாா்மடத்தில் பூட்டி கிடக்கும் பொது கழிப்பறை: நாம் தமிழா் கட்சியினா் புகாா்

பரமன்குறிச்சியில் திமுக நல உதவிகள் வழங்கல்

SCROLL FOR NEXT