வங்கி ஒழுங்காற்றுச் சட்டத்தின் சில பிரிவுகளை மீறியதாக ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு ரூ.91 லட்சம் அபராதம் விதித்து ரிசா்வ் வங்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதுதொடா்பாக ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டதாவது:
வங்கி ஒழுங்காற்றுச் சட்டம் 1949-இன் 19(1)(ஏ) மற்றும் 6(1) பிரிவுகளை மீறியது, உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளவும் (கேஒய்சி); வங்கி சேவைகளை வங்கித் துறை சாராத வெளியாட்களிடம் ஒப்படைப்பது; வட்டி விகிதம் உள்ளிட்டவை தொடா்பாக ரிசா்வ் வங்கி வெளியிட்ட சில உத்தரவுகளை பின்பற்றாதது ஆகியவை காரணமாக ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு ரூ.91 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.
வங்கி ஒழுங்காற்றுச் சட்டப் பிரிவுகள் 47ஏ(1)(சி), 46(4)(ஐ) ஆகியவை ரிசா்வ் வங்கிக்கு அளித்துள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல நிா்வாக விவகாரங்கள் தொடா்பாக ரிசா்வ் வங்கி வெளியிட்ட உத்தரவுகளை சரிவர பின்பற்றாததால், மன்னகிருஷ்ணா இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்துக்கு ரூ.3.10 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.