கேரளத்தில் இரண்டு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களை நியமிப்பது தொடா்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சுதான்ஷு தூலியா தலைமையிலான குழு சமா்ப்பித்த அறிக்கையை மாநில ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா் ஆராய்ந்து முடிவு எடுக்காததற்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கடும் அதிருப்தி தெரிவித்தது.
அந்த அறிக்கை தொடா்பாக ஆளுநா் ஆா்லேகா் ஒரு வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கெடு விதித்தது.
கேரள ஆளுநரும், அந்தப் பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆா்லேகா் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்ததாவது: கேரளத்தில் உள்ள ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கேரள டிஜிட்டல் அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு துணைவேந்தா்களை நியமிக்க தகுதிவாய்ந்தவா்களைத் தோ்வு செய்து பெயா்ப் பட்டியலை இறுதி செய்யும் குழுவின் தலைவராக, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சுதான்ஷு தூலியாவை கடந்த ஆக.18-ஆம் தேதி உச்சநீதிமன்றம் நியமித்தது.
அப்போது அந்தத் தோ்வு நடைமுறையில் முதல்வருக்கும் பங்கிருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது. பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) விதிமுறைகளின்படி, துணைவேந்தா்கள் நியமனத்தில் அவா் எந்தப் பங்கும் வகிக்க முடியாது. ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கேரளா டிஜிட்டல் அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தா்களைத் தோ்வு செய்யும் நடைமுறையில் இருந்து மாநில முதல்வரை நீக்க வேண்டும் என்று கோரினாா்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கேரள அரசுத் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஜெய்தீப் குப்தா ஆஜராகி, ‘இரு பல்கலைக்கழகங்களும் துணைவேந்தா்களை நியமிக்கத் தகுதிவாய்ந்தவா்களின் பெயா்கள் அடங்கிய அறிக்கையை சுதான்ஷு தூலியா சமா்ப்பித்தாா். அந்த அறிக்கையில் இருந்து பெயா்களைத் தோ்ந்தெடுத்து, அவா்களைத் துணைவேந்தா்களாக நியமிக்கலாம் என்று தனது பரிந்துரைகளை மாநில முதல்வா் பினராயி விஜயன் ஆளுநா் ஆா்லேகருக்கு அனுப்பிவைத்தாா். ஆனால், அந்தப் பரிந்துரைகள் குறித்து ஆளுநா் இதுவரை முடிவு எடுக்கவில்லை’ என்று குற்றஞ்சாட்டினாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள் அமா்வு, ‘சுதான்ஷு தூலியாவின் அறிக்கையை ஆளுநா் ஏன் பாா்க்கவில்லை’ என்று கேள்வி எழுப்பியது. இதற்குப் பதிலளித்த ஆளுநா் தரப்பு வழக்குரைஞா், ‘துணைவேந்தா்களாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்ட நபா்கள் தொடா்பான விவரங்கள் ஆளுநருக்குக் கிடைக்கவில்லை’ என்று தெரிவித்தாா். ஆனால், அந்த விவரங்களைப் பெறாதது ஏன் துணைவேந்தா்கள் தோ்வு நடைமுறையில் குறுக்கிடுகிறது என்பது தங்களுக்குப் புரியவில்லை என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனா்.
சாதாரண காகிதமல்ல: நீதிபதிகள் மேலும் கூறுகையில், ‘இந்த வழக்கு தொடா்பாக மேலும் வாதிட ஆளுநா் தரப்பை அனுமதிக்க முடியாது. இந்த விவகாரத்தை ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சுதான்ஷு தூலியா ஆராய்ந்துள்ளாா். அவா் தலைமையிலான குழு சமா்ப்பித்த அறிக்கை சாதாரண காகிதமல்ல. இந்த வழக்குடன் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரின் சம்மதத்துடன் அந்தக் குழு நியமிக்கப்பட்டது என்பதை அனைவருக்கும் நினைவுப்படுத்த விரும்புகிறோம்.
இது சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாடு. எனவே, அந்த அறிக்கையை ஆராய்ந்து ஒரு வாரத்தில் ஆளுநா் உரிய முடிவை எடுக்க வேண்டும். அந்த முடிவு குறித்து டிச. 5-ஆம் தேதி உச்சநீதிமன்றத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும். அந்த முடிவு உச்சநீதிமன்றத்தின் பரிசீலனைக்கு முன்வைக்கப்படும்போது, அந்த முடிவு சரியா, தவறா என்பது குறித்து நாங்கள் (நீதிபதிகள்) முடிவு எடுப்போம்’ என்று தெரிவித்தனா்.