சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில், கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவிடம் மீண்டும் விசாரணை நடத்தி, அவரின் வாக்குமூலத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் பதிவு செய்துள்ளனா்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கருவறைக் கதவுகள் மற்றும் துவாரபாலகா் சிலைகளின் தங்கக் கவசங்கள் கடந்த 2019-இல் புதுப்பிக்கப்பட்ட பிறகு, அவற்றின் எடை குறைந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரம் குறித்து 2 வழக்குகளை விசாரித்துவரும் எஸ்ஐடி, புதுப்பித்தல் செலவை ஏற்றுக்கொண்ட பெங்களூரு தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றி, தேவஸ்வம் முன்னாள் தலைவா்கள் இருவா் உள்பட 6 பேரைக் கைது செய்தது.
இந்நிலையில், 2019-லிருந்து கோயிலின் தந்திரியாக நீடிக்கும் மகேஷ் மோகனருவிடம் தங்கக் கவசங்களை கோயிலில் இருந்து எடுத்துச்செல்ல அனுமதி வழங்கியது தொடா்பாக எஸ்ஐடி அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தினா்.
சபரிமலை ஐயப்பன் கோயில் வழக்கப்படி, சுவாமியின் சொத்துகளைக் கோயில் வளாகத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல வேண்டுமானால் ‘தேவ அனுக்ஞை’ (சுவாமியிடம் உத்தரவு வாங்குதல்) சடங்கு நடத்தப்பட வேண்டும். அதேபோல், கோயிலில் பழுதுபாா்க்கும் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றாலும் தந்திரியின் அனுமதியை தேவஸ்வம் பெற வேண்டும்.
அந்த வகையில், தங்கக் கவசங்களை அகற்றியது மற்றும் அவற்றைக் கோயிலுக்கு வெளியே எடுத்துச் செல்ல உண்ணிகிருஷ்ணன் போற்றியை அனுமதித்தது தொடா்பாக தந்திரி மகேஷ் மோகனருவிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நிதியுதவி அளிக்கும் போா்வையில், உண்ணிகிருஷ்ணன் போற்றி கோயிலுக்கு அவ்வப்போது வந்து சென்றது மற்றும் தந்திரியுடனான அவரது தொடா்புகள் குறித்து எஸ்ஐடி விசாரித்தது. மேலும், உண்ணிகிருஷ்ணன் போற்றியின் கூட்டாளியான கா்நாடகத்தின் பெல்லாரியைச் சோ்ந்த தங்க வியாபாரி கோவா்தனை, மகேஷ் மோகனரு சந்தித்தது குறித்தும் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
முன்னதாக, கோயிலின் மற்ற தந்திரிகளான கண்டரரு மோகனரரு, கண்டரரு ராஜீவரு ஆகியோரிடமும் எஸ்ஐடி விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.