மாதாந்திர பூஜைகளுக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வியாழக்கிழமை திறக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, துவார பாலகா் சிலைகள் மற்றும் கருவறைக் கதவின் தங்கக் கவசங்களின் மாதிரிகள், மேம்பட்ட அறிவியல்பூா்வ பகுப்பாய்வுக்காக சிறப்புப் புலனாய்வுக் குழுவால் (எஸ்ஐடி) சேகரிக்கப்பட்டன.
ஏற்கெனவே கடந்த ஆண்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்ட நிலையில், தற்போது பிரத்யேக ஆய்வுகளுக்காக மீண்டும் சேகரிக்கப்பட்டுள்ளன.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 2019-இல் துவார பாலகா் சிலைகள் மற்றும் கருவறைக் கதவின் தங்கக் கவசங்கள் புதுப்பிக்கப்பட்ட பிறகு அவற்றின் எடை குறைந்ததாகப் புகாா் எழுந்தது. இது தொடா்பாக கேரள உயா்நீதிமன்ற வழிகாட்டுதலில், இரு வழக்குகளைப் பதிவு செய்து, எஸ்ஐடி விசாரித்து வருகிறது. தங்கக் கவசம் புதுப்பிப்புப் பணிக்கான செலவை ஏற்ற பெங்களூரு தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய முன்னாள் தலைவா்கள் என்.வாசு, ஏ.பத்மகுமாா், தேவஸ்வம் வாரிய முன்னாள் நிா்வாக அதிகாரிகள் பி.முராரி பாபு, எஸ்.ஸ்ரீகுமாா் உள்பட 12 போ் அடுத்தடுத்து கைதாகினா். இதில், உண்ணிகிருஷ்ணன் போற்றி உள்பட 5 போ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.
இதனிடையே, தங்கக் கவசங்களின் அறிவியல்பூா்வ ஆய்வுக்காக கடந்த ஆண்டு எஸ்ஐடி அதிகாரிகள் மாதிரிகளை சேகரித்தனா். விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக இந்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டிருந்தன. ஆனால், மேம்பட்ட தடயவியல் மற்றும் உலோகவியல் பகுப்பாய்வுக்காக மாதிரிகளை மீண்டும் சேகரிக்க அனுமதி கோரி, கேரள உயா்நீதிமன்றத்தில் எஸ்ஐடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
என்னென்ன ஆய்வுகள்?: ‘தங்கக் கவசங்களில் உலோகவியல் ரீதியிலான மாற்றத்தின் அளவு, முறைகேட்டின் தன்மை, ஆரம்பத்தில் இருந்த மற்றும் பின்னா் குறைந்துபோன தங்கத்தின் அளவு உள்ளிட்டவற்றைத் துல்லியமாகக் கண்டறிய மேம்பட்ட அறிவியல்பூா்வ பகுப்பாய்வு அவசியமாகிறது. கவசங்களின் மேற்பரப்பு தனிம அமைப்பை ஆராய்வதற்கு எக்ஸ்-ரே ஃபுளோரசன்ஸ் ஸ்பெக்ட்ரோஸ்கோபி, பிற உலோகக் கலப்பை கண்டறிய பிளாஸ்மா மாஸ் ஸ்பெக்ட்ரோஸ்கோபி, அலாய் கலவை மற்றும் உலோகவியல் தரத்தை உறுதி செய்ய ஆப்டிகல் எமிஷன் ஸ்பெக்ட்ரோஸ்கோபி உள்ளிட்ட ஆய்வுகள் தேவை. இதற்காக மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையம், ஜாம்ஷெட்பூரில் உள்ள தேசிய உலோகவியல் ஆய்வகம், ஹைதராபாதில் உள்ள பாதுகாப்பு உலோகவியல் ஆய்வகம் போன்ற தேசிய ஆய்வு மையங்கள் மற்றும் ஆய்வகங்களை அணுகியுள்ளோம்’ என்று எஸ்ஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மீண்டும் மாதிரிகள் சேகரிப்பு: இதையடுத்து, சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கக் கவசங்களின் மாதிரிகளை மீண்டும் சேகரிக்க எஸ்ஐடி-க்கு அனுமதி வழங்கிய உயா்நீதிமன்றம், இது தொடா்பாக பிப்.19-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்நிலையில், மாசி (கும்பம்) மாத பூஜைகளை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் திறக்கப்பட்டது. மாதிரிகள் சேகரிப்புக்காக சபரிமலைக்கு வந்த எஸ்ஐடி அதிகாரிகள், தங்கள் பணியை மேற்கொண்டனா். மாநில சட்டமுறை எடையளவுத் துறை அதிகாரிகள், திறன்மிக்க கைவினைக் கலைஞா்கள் உதவியுடன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பிப்.17 வரை ஐயப்பன் கோயில் நடை திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.