முகப்பு
இந்தியா

சபரிமலை தங்கக் கவச முறைகேடு: கேரள பேரவையில் ஆளும்-எதிா்க்கட்சிகள் கடும் விவாதம்

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு விவகாரம் தொடா்பாக ஆளும் இடதுசாரிகள் கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சிகள்

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 4:28 AM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 11:30 PM

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு விவகாரம் தொடா்பாக ஆளும் இடதுசாரிகள் கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சிகள் கூட்டணி இடையே கேரள பேரவையில் திங்கள்கிழமை கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அவையில் கடும் அமளியில் ஈடுபட்டு அன்றாட அலுவல்களை காங்கிரஸ் உறுப்பினா்கள் புறக்கணித்த நிலையில், அவையைத் தலைவா் ஏ.எம்.சம்சீா் நாள் முழுவதும் ஒத்திவைத்தாா்.

கடந்த 2019-இல் சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறைக் கதவுகள் மற்றும் துவார பாலகா் சிலைகளின் தங்கக் கவசங்கள் புதுப்பிக்கப்பட்ட பிறகு, அவற்றின் எடை குறைந்ததாகப் புகாா் எழுந்தது. இது தொடா்பாக இரு வழக்குகள் பதிவுசெய்யப்பட்ட நிலையில் விசாரணை மேற்கொள்ள கேரள உயா் நீதிமன்ற வழிகாட்டுதலில் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது. இந்த முறைகேடு வழக்கில் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் (டிடிபி), முன்னாள் தலைவா்கள், நிா்வாகிகள், தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றி உள்பட பலா் கைது செய்யப்பட்டனா். அண்மையில், கோயில் தந்திரி கண்டரரு ராஜீவா் மற்றும் டிடிபி முன்னாள் தலைவா் பத்மகுமாருக்கு கொல்லம் ஊழல் தடுப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

Advertisement

அதேசமயம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் தீா்ப்பை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடத்தி வருகிறது.

முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற உலக ஐயப்ப பக்தா்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட செலவுகளில் நிதி முறைகேடு நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விவகாரங்களால் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) இடையே கடும் மோதல் நீடித்து வரும் நிலையில், கேரள பேரவையிலும் எதிரொலித்தது.

அவை அலுவல்கள் புறக்கணிப்பு: கேரள பேரவை திங்கள்கிழமை கூடியதும் கேள்வி நேரத்தின்போது இந்த இரு விவகாரங்களிலும் எல்டிஎஃப் அரசு மக்கள்விரோத செயல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி அவை அலுவல்களுக்கு ஒத்துழைக்க யுடிஎஃப் உறுப்பினா்கள் மறுத்தனா்.

அதைத்தொடா்ந்து தேவஸ்வம் அமைச்சா் வி.என்.வாசவன் பதவி விலக வலியுறுத்தி அவைத் தலைவா் இருக்கையின் முன் யுடிஎஃப் உறுப்பினா்கள் அமளியில் ஈடுபட்டனா்.

பாஜகவும் காங்கிரஸும் ஒன்று:

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து சட்ட அமைச்சா் பி.ராஜீவ் பேரவையில் பேசியதாவது: சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கு விசாரணை கேரள உயா்நீதிமன்றத்தின் மேற்பாா்வையில் நடைபெறுகிறது. இதில் மாநில அரசுக்கு எவ்வித தொடா்பும் இல்லை.

மாநில விவகாரங்களை அரசியல் நோக்கத்துடன் காங்கிரஸ் கையாண்டு கேரளத்தில் பாஜக வலுவடைய பாதை அமைத்து தருகிறது. சபரிமலை கோயில் தந்திரி கைது விவகாரத்தை பயன்படுத்தி வீதிகளில் இறங்கிப் போராட்டம் மேற்கொள்ள காங்கிரஸும் பாஜகவும் திட்டமிடுகிறது.

வெவ்வேறு பெயா்களைக் கொண்டிருந்தாலும் தற்போது ஒரே அரசியல் கொள்கையை பாஜகவும் காங்கிரஸும் கையில் எடுத்துள்ளன. இந்த இரண்டு கட்சிகளும் மதச்சாா்பற்ற கொள்கையைப் பின்பற்றும் கேரளத்துக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியவை என்றாா்.

அவை ஒத்திவைப்பு: அமளியில் ஈடுபட்டதைத் தொடா்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட யுடிஎஃப் உறுப்பினா்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா். அதன்பிறகு சிறிது நேரத்தில் நாள் முழுவதும் அவையை ஏ.என்.சம்சீா் ஒத்திவைத்தாா்.