இந்தியா - சீனா இடையே கடந்த 5 ஆண்டுகளாக நீடித்த பதற்றங்களுக்குப் பின்னர் முதல் முறையாக வருகிற 26 ஆம் தேதி நேரடி விமான சேவை துவங்கப்படவுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு ஜூன் 15, 16-ஆம் தேதிகளில் இமயமலைத் தொடரில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா ராணுவத்தினர் மற்றும் சீன ராணுவத்துக்கு இடையேயான சண்டையில் இந்திய வீரர்கள் 20 பேரும், சீனத் தரப்பிலும் 35 பேர் உயிரிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து கரோனா பெருந்தொற்று, லடாக் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால், இந்தியா - சீனா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு இந்தியாவில் சீன செயலிகளுக்கு தடைவிதிக்கப்பட்டு, விமான போக்குவரத்து தடைசெய்யப்பட்டது.
2024 அக்டோபரில் ரஷியாவின் கசானில் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்பின்னர், அவரின் அழைப்பின் பேரில் கடந்த ஆகஸ்ட் மாதம் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி அங்கு சென்றிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாக சீன அதிபரின் வரவேற்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி, ஷாங்காயில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். அப்போது, பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் நேரில் சந்தித்து உரையாடினர்.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கடந்த மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது விமான சேவை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
அப்போது நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்குவது தொடர்பான முதல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இண்டிகோ நிறுவனம் விமான சேவைகளை இயக்க ஏர்பஸ் ஏ320நியோ விமானங்களைப் பயன்படுத்த உள்ளது.
இந்த நிலையில், இந்தியாவிலிருந்து சீனாவுக்கு நேரடி விமான சேவையை வருகிற அக்டோபர் 26 முதல் துவங்கும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே இண்டிகோ விமான போக்குவரத்து நிறுவனம், கொல்கத்தாவில் இருந்து குவாங்சோ இடையே தினசரி சேவைகளைத் தொடங்கவிருப்பதை தெரிவித்துள்ளது. மேலும், தில்லியில் இருந்து குவாங்சோவுக்கு விரைவில் விமான போக்குவரத்து தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஏர் இந்தியா, இண்டிகோ, ஏர் சீனா, சீனா சதர்ன் மற்றும் சீனா ஈஸ்டர்ன் ஆகியவை நேரடி விமானங்களை இயங்கி வந்த நிலையில், அது மீண்டும் படிப்படிப்பாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.