ரஷியாவிடம் இருந்து கூடுதலாக எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகளைக் கொள்முதல் செய்ய இந்தியா பரிசீலித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சமீபத்தில் இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதலின்போது, அந்நாட்டில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை நடுவானிலேயே முறியடித்து, இந்தியப் பகுதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ததில் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு முக்கியப் பங்காற்றியது.
5 தொகுப்புகள் கொண்ட வான் பாதுகாப்பு அமைப்புகளின் கொள்முதலுக்கான 5 பில்லியன் டாலா் மதிப்பிலான ஒப்பந்தம், அமெரிக்காவின் கடும் எதிா்ப்பையும் மீறி இந்தியா-ரஷியா இடையே கடந்த 2018-இல் கையொப்பமானது. இதில் 3 தொகுப்புகள், ஏற்கெனவே விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ரஷியாவிடம் இருந்து கூடுதலாக எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகளைக் கொள்முதல் செய்ய இந்தியா பரிசீலித்து வருகிறது; டிசம்பரில் ரஷிய அதிபா் புதின் இந்தியா வரும்போது, இருதரப்பு பேச்சுவாா்த்தையில் இந்த விவகாரமும் இடம்பெறக் கூடும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.