குவாஹாட்டி: மறைந்த அஸ்ஸாமைச் சேர்ந்த பிரபல பாடகர் ஸுபீன் கர்க் உயிரிழப்பு விபத்தா அல்லது கொலையா உள்ளிட்ட பல சந்தேகங்களை கிளப்பியிருக்கும் நிலையில், அவரது உடலுக்கு இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட உடற்கூராய்வு அறிக்கையும் வெளியாகியுள்ளது.
வடகிழக்கு இந்திய கலாசார விழாவில் பங்கேற்க சிங்கப்பூர் சென்றிருந்த ஸுபீன் கர்க் அங்கு கடலில் குளிக்கும்போது உயிரிழந்தார். செப். 19-இல் வெளியான ஸுபீன் கர்க்கின் மரணச் செய்தி, உலகெங்கிலுமுள்ள பல்லாயிரக்கணக்கான அவரது ரசிகர்களை மீளாத் துயரத்திலும் அதிர்ச்சியிலும் திணறச் செய்துள்ளது.
இந்த நிலையில், அவரது மரணம் திட்டமிட்ட கொலை என்ற சந்தேகம் பூதாகரமாக வெடித்துள்ளது. இதையடுத்து, சிங்கப்பூருக்கு அவரை அழைத்துச் சென்ற நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் ஸுபீன் கர்க்கின் மேலாளருமான சித்தார்த் சர்மா மற்றும் ஸ்பீன் கர்க்கின் இசைக் குழுவைச் சேர்ந்த இருவர்- ஷேகர் ஜோதி கோஸ்வாமி, அம்ரித்பிரபா மஹாந்தா ஆகியோர் கைது செய்ய்ப்பட்டு 14 நாள் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஸ்பீன் கர்க்கின் மரண வழக்கை, அதாவது அவர் சிங்கப்பூரில் உயிரிழந்தது எப்படி என்பதை சிஐடி விசாரித்து வருகிறது. 9 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு இதற்காக நியமிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம் மாநில அரசால் ஒருநபர் நீதிமன்ற விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த செப். 23-இல் ஸுபீன் கர்க்கின் உடல் தகனம் செய்யப்படுவதற்கு முன் இரண்டாவது முறையாக அஸ்ஸாமில் உடற்கூராய்வு அறிக்கை மேற்கொள்ளப்பட்டது. உடற்கூராய்வுக்குப் பின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவையனைத்தும் தில்லியிலுள்ள மத்திய தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. அங்கு விரிவான ஆய்வுக்குப் பின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சிங்கப்பூரில் ஸுபீன் கர்க் உடலுக்கு மேற்கொள்ளப்பட்ட உடற்கூராய்வு அறிக்கையை அவரது மனைவி கடந்த வியாழக்கிழமை பெற்றுக்கொண்டார். இதனிடையே, இரண்டாவது உடர்கூராய்வு அறிக்கையை ஸுபீன் கர்க்கின் மனைவி கரீமா சைகியா கர்க்கிடம் காவல் துறையினர் இன்று(அக். 4) வழங்கினர். அதிலுள்ள விவரங்களை பொதுவெளியில் அறிவிப்பதா அல்லது தனிப்பட்ட முறையில் பாதுகாப்பதா என்பது குறித்த முடிவை கரீமா சைகியா கர்க் எடுப்பார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களுடன் பேசிய கரீமா சைகியா கர்க், “ஸுபீன் கர்க்கின் உடற்கூராய்வு அறிக்கையை நான் காவல்துறை அதிகாரிகளிடமே ஒப்படைத்துவிட்டேன். அதிலுள்ள விவரங்களை வெளிப்படுத்தினால் விசாரணைக்கு பாதிப்பு ஏற்படுமா என்பதி குறித்து இனி அவர்களே முடிவு செய்துகொள்ளட்டும். ஸுபீன் கர்க்கின் மரணத்தில் யாருக்கேனும் தொடர்பிருந்து குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு கடுந்தண்டனை கிடைக்க வேண்டும்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.