மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 11 குழந்தைகளின் இறப்புக்குக் காரணமாகக் கூறப்படும் இருமல் மருந்தைப் பரிந்துரைத்த மருத்துவர் பிரவீன் சோனி கைது செய்யப்பட்டார்.
மத்திய பிரதேசத்தில் சிந்த்வாராவில் செப். 7 ஆம் தேதி முதல் குழந்தைகள் சிலருக்கு சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டதாகக் கூறிய நிலையில், அக். 3 ஆம் தேதி வரையில் 11 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான முதல் தகவல் அறிக்கையில், `சளி, இருமல், காய்ச்சல் தொல்லையால் பாராசியாசில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு இருமல் மருந்து உள்ளிட்ட சில மருந்துகளை மருத்துவர் பிரவீன் சோனி பரிந்துரைத்த நிலையில், அடுத்த சில நாள்களிலேயே குழந்தைகளுக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்னை, முக வீக்கம், வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு, சிறுநீரகம் செயலிழந்தது தெரியவந்தது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனமான ஸ்ரீசென் பாா்மா நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தில் ஆபத்தான டைஎத்திலின் கிளைக்கால் இருந்தது தெரிய வந்தது.
பெயிண்ட், மை போன்ற பொருள்களைத் தயாரிக்க பயன்படுத்தப்படும் அந்த ரசாயனம், சம்பந்தப்பட்ட இருமல் மருந்துகளில் கலந்திருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஸ்ரீசென் பாா்மா நிறுவனத்தின் மீது மத்திய பிரதேச அரசு வழக்குப்பதிவு செய்ததுடன், 15-க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தடையும் விதித்தது.
உயிரிழந்த குழந்தைகளில் பெரும்பாலானோர் பிரவீன் சோனியின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதுடன், அவர்களுக்கு மருந்தைப் பரிந்துரைத்ததால், பிரவீன் சோனியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மட்டுமின்றி தமிழகம் மற்றும் கேரளத்திலும் இந்த மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மக்களே உஷார்!! பஹல்காம் தாக்குதல் பெயரால் முதியவரிடம் ரூ.70 லட்சம் மோசடி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.