பள்ளிகளுக்கு விடுமுறை 
இந்தியா

சாதிவாரிக் கணக்கெடுப்பு: பள்ளிகளுக்கு 10 நாள்கள் விடுமுறை- சித்தராமையா

கர்நாடகத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்புப் பணிக்காக அரசுப் பள்ளிகளுக்கு 10 நாள்கள் விடுமுறை அறிவிப்பு.

இணையதளச் செய்திப் பிரிவு

கர்நாடக மாநிலத்தில், நடைபெற்று வரும் சாதிவாரிக் கணக்கெடுப்புப் பணியில், பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அக்.8 முதல் 18ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மாநில மக்களின் சமூக மற்றும் கல்வி நிலை தொடர்பாக அறிந்துகொள்ளும் வகையில், நடைபெற்று வரும் சாதிவாரிக் கணக்கெடுப்புப் பணி அக்டோபர் 7ஆம் தேதி நிறைவு பெற்றிருக்க வேண்டிய நிலையில் சில மாவட்டங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு பணி தாமதத்தால் நிறைவு பெறவில்லை.

இந்த நிலையில், சாதிவாரிக் கணக்கெடுப்பை முடிக்க ஆசிரியர்கள் தரப்பில் 10 நாள்கள் அவகாசம் கோரப்பட்டிருப்பதால், முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சாதிவாரிக் கணக்கெடுப்புப் பணிகளை நிறைவு செய்ய 10 நாள்கள் கால அவகாசம் நீட்டித்து உத்தரவிடப்பட்டது.

இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறுகையில், கர்நாடகத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு இன்று நிறைவு பெற்றிருக்க வேண்டும். ஆனால், சில மாவட்டங்களில், கிட்டத்தட்ட நிறைவுபெறும் தருவாயில் உள்ளது. ஆனால், ஒரு சில மாவட்டங்களில் காலதாமதம் ஆகிறது.

உதாரணத்துக்கு கோப்பல் மாவட்டத்தில் 97 சதவீதப் பணிகள் நிறைவு பெற்றுவிட்டன. ஆனால், உடுப்பி மற்றும் தட்சிண கன்னடா மாவட்டங்களில் முறையே 63 மற்றும் 60 சதவிகிதம்தான் நிறைவு பெற்றுள்ளது.

ஒட்டுமொத்தமாக, மாநிலம் முழுவதும் நாங்கள் எதிர்பார்த்தது போல சாதிவாரிக் கணக்கெடுப்பு நிறைவடையவில்லை. இன்னும் 10 நாள்கள் கால அவகாசம் இருந்தாலும், அக். 18 வரை இன்னும் 8 வேலைநாள்கள்மட்டும்தான் உள்ளது.

இதனால், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இடைநிலைத் தேர்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு சாதிவாரிக் கணக்கெடுப்புப் பணியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும், சாதிவாரிக் கணக்கெடுப்புப் பணியின்போது உயிரிழந்த 3 ஊழியர்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் அறிவித்துள்ளார்.

எப்போது தொடங்கியது?

கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசு, சமூக மற்றும் கல்விக் கணக்கெடுப்பு என்கிற பெயரில் ஜாதிவாரி கணக்கெடுப்புப் பணியை நடத்தி வருகிறது.

இந்தக் கணக்கெடுப்பு கடந்த செப்டம்பா் 22 முதல் அக்டோபா் 7-ஆம் தேதி வரை நடத்தி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மாநிலம் முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்புப் பணியை நடத்தி முடிக்க சுமார் ரூ.420 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இன்று நிறைவு பெற்றிருக்க வேண்டிய பணிகள் முழுமையடையாததால் இன்னும் 10 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Karnataka Chief Minister on Tuesday announced holiday for government and government aided schools in the state from October 8 to October 18 so that the teachers involved in the work can complete the ongoing social and educational survey, called ‘caste survey'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூய்மைப் பணியாளர் உயிரிழந்தால் ரூ.35 லட்சம் நிவாரணம்: உ.பி. அரசு

ரஷிய அதிபர் புதினுடன் பேசிய மோடி!

பகலை இரவாக்கிய கருமேகங்கள் - புகைப்படங்கள்

நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு| செய்திகள்: சிலவரிகளில் |7.10.25

உலகக் கோப்பை: இங்கிலாந்துக்கு எதிராக 178 ரன்களுக்கு ஆட்டமிழந்த வங்கதேசம்!

SCROLL FOR NEXT