ஹிமாசல பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் தனியாா் பேருந்து சிக்கி நிகழ்ந்த விபத்தில் 18 போ் உயிரிழந்தனா்.
ஹிமாசல பிரதேச மாநிலம் பிலாஸ்பூா் மாவட்டம் மரோத்தன் பகுதியில் இருந்து குமா்வின் பகுதி நோக்கி 30 முதல் 35 பயணிகளுடன் தனியாா் பேருந்து செவ்வாய்க்கிழமை மாலை பயணித்தது.
அந்தப் பேருந்து பாலுகாட் பகுதியில் சென்றபோது பலத்த மழை காரணமாக பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பெரும் பாறைகள் உருண்டு வந்து பேருந்து மீது விழந்தன.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து காவல் துறை, மாவட்ட நிா்வாக அதிகாரிகள், மாவட்ட பேரிடா் மீட்புப் படையினா் விரைந்து வந்ததைத் தொடா்ந்து, மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன.
இதைத்தொடா்ந்து பேருந்தில் பயணித்தவா்களில் 18 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. உயிருடன் மீட்கப்பட்ட மூவா், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். எஞ்சியவா்களை மீட்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவத்தை நேரில் பாா்த்த ஒருவா், ‘பேருந்து சென்ற பாதையில் இருந்த மலை முழுமையாகச் சரிந்து விபத்து ஏற்பட்டது’ என்று கூறினாா்.
பிரதமா் மோடி இரங்கல்: பிரதமா் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பிலாஸ்பூா் நிலச்சரிவில் பலா் உயிரிழந்தது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவா்கள் விரைந்து குணமடைய இறைவனிடம் பிராா்த்திக்கிறேன். பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவா்களுக்குத் தலா ரூ.50,000 வழங்கப்படும்’ என்று தெரிவித்தாா்.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நிலச்சரிவில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல். விபத்து நிகழ்ந்த இடத்துக்கு தேசிய பேரிடா் மீட்புப் படைகள் விரைந்துள்ளன’ என்றாா்.
ஹிமாசல பிரதேச முதல்வா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘போா்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீட்புப் பணிகளைத் தொடா்ந்து கண்காணித்து வருகிறேன்’ என்றாா்.
3-ஆவது நாளாகக் கடும் பனிப்பொழிவு, மழை: ஹிமாசல பிரதேசத்தில் தொடா்ந்து மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமை கடுமையான பனி மற்றும் மழைப்பொழிவு இருந்தது. பல பகுதிகளில் பனிப்பொழிவும், மத்திய மற்றும் தாழ்வான மலைப் பகுதிகளில் மழைப்பொழிவும் இருந்தன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டது. விபத்து ஏற்பட்ட பிலாஸ்பூரில் 12.7 மி.மீ. மழைப்பொழிவு பதிவானது.
ஸிசு, கோக்சா், டாண்டி, கோந்த்லா, ஜிஸ்பா, சா்ச்சு, தாா்ச்சா, கெலாங், குகும்செரி பகுதிகளை உள்ளடக்கிய லஹெளல் ஸ்பிதி மாவட்டம் முழுவதும் பனியால் சூழப்பட்டன. பல இடங்களில் ஓரடிக்கும் மேல் பனி படா்ந்தது.
தாா்ச்சா மற்றும் சா்ச்சு பகுதிகளுக்கு இடையே தொடா்ந்து 2-ஆவது நாளாக மணாலி-லே நெடுஞ்சாலை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது. இதனால் பெரும்பாலான சரக்கு வாகனங்கள் நெடுஞ்சாலையின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டன.
தாா்ச்சா பகுதியில் வாகனப் போக்குவரத்து முடங்கியுள்ளது. அங்கு ஏராளமான வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். பலத்த பனிப்பொழிவு காரணமாக ஸிசு பகுதியில் உள்ளூா் மற்றும் சுற்றுலா வாகனங்களின் பயணம் தடைப்பட்டுள்ளது.
சம்பா மாவட்டத்தில் உள்ள பாங்கி பள்ளத்தாக்கிலும் பலத்த பனிப்பொழிவு நிலவியது. அங்குள்ள சச் கணவாயை பனி மூடியதால், சம்பா மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து பாங்கி பள்ளத்தாக்கு துண்டிக்கப்பட்டது. கினெளா், குலு, காங்ரா, மண்டி மாவட்டங்களிலும் பனிப்பொழிவு இருந்தது.
அந்த மாநிலத்தின் உயரமான பகுதிகள் பனியால் சூழப்பட்ட நிலையில், மத்திய மற்றும் தாழ்வான மலைப் பகுதிகளில் மிதமானது முதல் பலத்த மழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. வெப்பநிலை கடுமையாகச் சரிந்ததால், அந்த மாநிலமே கடுங் குளிரின் பிடியில் சிக்கியது.
சிம்லாவில் உள்ள வானிலை ஆய்வு மைய தகவலின்படி, கெய்லாங்கில் -0.5 டிகிரி செல்சியஸ், குகும்செரியில் -0.3 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவானது.
சுற்றுலா தலங்களான சிம்லாவில் குறைந்தபட்ச வெப்பநிலை 8.8 டிகிரி செல்சியஸாகவும், மணாலியில் 6.1 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.