சாலைகளில் பாதசாரிகளின் நடமாட்டம் மற்றும் மிதிவண்டி உள்ளிட்ட மோட்டாா் அல்லாத வாகனங்களின் இயக்கத்துக்கான பாதுகாப்பு விதிமுறைகளை 6 மாதங்களுக்குள் வகுக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெடுஞ்சாலைகள் அல்லாத பிற சாலைகளுக்கான வடிவமைப்பு, கட்டுமானம், பராமரிப்புக்கான தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை வகுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகரித்து வருவதைக் குறிப்பிட்டு, கோவையைச் சோ்ந்த அறுவை சிகிச்சை நிபுணா் எஸ்.ராஜசேகரன் தாக்கல் செய்த மனு மீது நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளனா்.
‘இந்தியாவில் சாலை விபத்துகளைத் தடுக்க ஒரே சீரான, ஒருங்கிணைந்த கொள்கை அவசியம்; இந்த விஷயத்தில், மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து, மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் செயல்திறன்மிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கோரப்பட்டது.
இம்மனு மீது செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், ‘தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் பொது இடங்களில் மோட்டாா் அல்லாத வாகனங்களின் அணுகல்-இயக்கம், பாதசாரிகளின் நடமாட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கு கடந்த 1988-ஆம் ஆண்டின் மோட்டாா் வாகன சட்டப் பிரிவு 138 (1ஏ)-இன்கீழ் பாதுகாப்பு விதிமுறைகளை மாநிலங்கள் இதுவரை வகுக்கவில்லை என்றால், அடுத்த 6 மாதங்களுக்குள் வகுக்க வேண்டும். இதேபோல், 210டி பிரிவின்கீழ் தேசிய நெடுஞ்சாலைகள் அல்லாத நெடுஞ்சாலைகளின் வடிவமைப்பு, கட்டுமானம், பராமரிப்புக்கான தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளையும் இதே காலகட்டத்துக்குள் வகுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.