ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலுக்கு தலைநகரில் டைப் - VII பங்களாவை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
மதுபான ஊழல் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட அரவிந்த் கேஜரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஜாமீனில் வெளியே வந்தார். 2015 முதல் ஆம் ஆத்மி தில்லியில் ஆட்சி அமைத்ததிலிருந்து கடந்தாண்டு செப்டம்பர் முதல்வர் பதவியிலிருந்து விலகும் வரை சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள ஃபிளாக் ஸ்டாஃப் சாலை பங்களாவில் கேஜரிவால் வசித்து வந்தார்.
கடந்தாண்டு செப்டம்பரில் அவர் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த நிலையில், அக்டோபர் மாதம் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்தார். அதன்பின்னர் மாநிலங்களவை எம்பி அசோக் மிட்டலுக்கு ஒதுக்கப்பட்ட அரசு வீட்டில் தங்கியுள்ளார்.
தமக்குத் தில்லியில் வீடு ஒதுக்கித் தர மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு கோரி ஆம் ஆத்மி கட்சி சார்பில் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அண்மையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உயர்நீதிமன்றம் மத்திய அரசை கண்டித்த நிலையில், 10 நாள்களுக்குள் பொருத்தமான வீடு ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்தது.
இந்த நிலையில், எண்.95 லோதி எஸ்டேட் என்ற முகவரியில் அமைந்திருக்கும் டைப் - VII வகையான வீட்டை அரவிந்த் கேஜரிவாலுக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
கடந்த ஓராண்டு காலம் கழித்து அரவிந்த் கேஜரிவாலுக்கு அரசு இல்லத்தை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
முன்னதாக, மாயாவதி பயன்படுத்திய லோதி எஸ்டேட் எண் 35இல் உள்ள பங்களாவை தனதுக்கு வழங்குமாறு ஆத் ஆத்மி கட்சி மத்திய அரசிடம் கேட்டிருந்தது. ஆனால் அந்த வீடு ஏற்கெனவே ஜூலை மாதம் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌரிக்கு ஒதுக்கப்பட்டது. எனவே லோதி எஸ்டேடில் உள்ள எண்.95 கேஜரிவாலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: போலி தொழில்நுட்ப சேவை மோசடி: 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.