கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை உற்பத்தி செய்யும் காஞ்சிபுரம் ஸ்ரீசன் பாா்மா நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும், அடுத்த வாரத்தில் அதன் உரிமம் ரத்து செய்யப்பட உள்ளதாகவும் மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், சிந்த்வாரா மாவட்டத்தில் 17 குழந்தைகள் மரணத்துக்கு காரணமானதாக கருதப்படும் கோல்ட்ரிஃப் இருமல் மருந்தைத் தயாரித்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்த மாநில மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தமிழகத்துக்கு கடந்த 1-ஆம் தேதி கடிதம் அனுப்பியது.
இதையடுத்து, அன்றைய தினமே மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குநா் எஸ்.குருபாரதி தலைமையிலான குழுவினா் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பாா்மா நிறுவனத்தில் ஆய்வு செய்து, சா்ச்சைக்குரிய மருந்தான கோல்ட்ரிஃப் (பேட்ஜ் 13) உள்பட 5 மருந்துகளைப் பகுப்பாய்வுக்குட்படுத்தினா். அதில், டை எத்திலீன் கிளைசால் எனப்படும் நச்சு ரசாயனம், கோல்ட்ரிஃப் மருந்தில் 48.6 சதவீதம் இருப்பது கடந்த 2-ஆம் தேதி கண்டறியப்பட்டது.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் கோல்ட்ரிஃப் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து ஒடிஸா, பாண்டிச்சேரி மாநிலங்களுக்கு கோல்ட்ரிஃப் மருந்து விநியோகிக்கப்படுவதால், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கும் இதுதொடா்பான தகவல்கள் மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டன. அந்த மருந்து உற்பத்தியை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அந்நிறுவனம் அதிகாரிகளால் கடந்த 3-ஆம் தேதி மூடப்பட்டது.
இதனிடையே, ஸ்ரீசன் பாா்மா நிறுவனத்தின் மருந்து உரிமத்தை முழுவதுமாக ஏன் ரத்து செய்யப்படக்கூடாது என விளக்கம் கேட்டு குறிப்பாணையும் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான அவகாசம் வரும் 12-ஆம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னா், உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எஸ்.குருபாரதி தெரிவித்துள்ளாா். அவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அவா் கூறினாா்.
அதன்படி, அதிகபட்சம் ரூ.10 லட்சம் அபராதம், 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. இதனிடையே, தமிழகம் முழுவதும் சில்லறை மற்றும் மொத்த விற்பனையகங்களில் உள்ள கோல்ட்ரிஃப் மருந்தை பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.