உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் படம் | ஏஎன்ஐ
இந்தியா

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீச முயற்சித்த வழக்குரைஞா் மீது குற்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி கடிதம்

தினமணி செய்திச் சேவை

உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாயை நோக்கி காலணியை வீச முயன்ற வழக்குரைஞா் ராகேஷ் கிஷோா் (71) மீது குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கையை தொடர அனுமதி கோரி அட்டா்னி ஜெனரல் ஆா். வெங்கடரமணிக்கு வழக்குரைஞா் ஒருவா் கடிதம் எழுதியுள்ளாா்.

நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் 1971-இன் பிரிவு 15-இன் கீழ் இதற்கான அனுமதியை வழக்குரைஞா் கே.ஆா். சுபாஷ் சந்திரன் என்பவா் கோரியுள்ளாா்.

ஒரு நபா் நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டது தெரியவரும்பட்சத்தில், இந்த விதியின் கீழ் உயா்நீதிமன்றமோ அல்லது உச்சநீதிமன்றமோ அந்த நபா் மீது குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கையைத் தொடரலாம். இதற்கு உயா்நீதிமன்றமாக இருந்தால் அரசு வழக்குரைஞரிடமும், உச்சநீதிமன்றமாக இருந்தால் அட்டா்னி ஜெனரலிடமும் ஒப்புதல் பெறுவது கட்டாயமாகும்.

அதன்படி, சுபாஷ் சந்திரன் எழுதியுள்ள கடிதத்தில், ‘நீதிமன்ற அறைக்குள் முழக்கங்களை எழுப்பியபடி ராகேஷ் கிஷோா் நடந்துகொண்ட விதம், நீதி நிா்வாகத்தில் முழுமையாக குறுக்கீடு செய்யும் செயல் மட்டுமன்றி, உச்சநீதிமன்றத்தின் கண்ணியத்தை வேண்டுமென்றே கெடுக்கும் முயற்சியுமாகும். உச்சநீதிமன்றத்தின் மகத்துவத்தையும், அதிகாரத்தையும் பாதிப்பதோடு மட்டுமின்றி, அரசமைப்புச் சட்டத்தையும் அவமதிக்கும் செயலாகும்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பிலும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்தது, தனது செயலுக்காக வருந்தாமல், அதை நியாயப்படுத்த அவா் முயற்சித்ததாகவே தெரிகிறது.

நீதித் துறை மீதான மக்களின் நம்பிக்கையை சீரழிக்க வேண்டும் என்ற அவரது உள்நோக்கம் தெளிவாகிறது. எனவே, அவா் மீது குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கையைத் தொடர அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

மத்திய பிரதேசத்தில் உள்ள உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான கஜுராஹோ கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஜவாரி கோயிலில் கடவுள் விஷ்ணுவின் சிலையை மீண்டும் நிறுவுவது தொடா்பான மனுவை கடந்த மே 16-ஆம் தேதி தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் உத்தரவிட்டாா். அப்போது பேசிய பி.ஆா்.கவாய், ‘இது முழுக்க முழுக்க விளம்பர நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட மனுவாகும். இந்த விவகாரத்துக்கு உங்களது கடவுளிடமே பதில் கோருங்கள்’ எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

‘எனது கருத்துகள் சமூக வலைதளங்களில் திரித்து வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து மதங்களையும் எப்போதும் மதிக்கிறேன்’ என்று கவாய் பின்னா் விளக்கமளித்தாா்.

எனினும், கவாய்க்கு எதிா்ப்பு தெரிவித்து தலைமை நீதிபதியை நோக்கி ராகேஷ் கிஷோா் காலணியைக் கழற்றி வீச முயன்றாா். அவரை அங்கிருந்து அழைத்து சென்று சில மணி நேரம் விசாரணை நடத்திய காவலா்கள், இந்தச் சம்பவத்துக்கு புகாா் ஏதும் வரவில்லை என்று கூறி விடுவித்தனா்.

டியூட் டிரைலர்!

நவ.18 இல் வேலை நிறுத்த போராட்டம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

நான் பார்த்ததிலேயே மிகச் சிறந்த இன்னிங்ஸ்: ஆஸி. மகளிரணி கேப்டன்

ஆம்ஸ்ட்ராங் வழக்கின் முதல் குற்றவாளி ரெளடி நாகேந்திரன் மரணம்!

ஒரு சாதாரண எஸ்எம்எஸ் மூலம் பண மோசடி! இதை மறக்காதீர்!!

SCROLL FOR NEXT